என்ன வேண்டுமாம் அவனுக்கு?
தான் தோன்றியாய் திரிவது தான் விருப்பம் என்றால், எதற்காக அவனுக்கென்று ஒருத்தி, அவளின் கனவுகள் அறியாத கண்களும், கதைகள் கேளாத செவிகளும், ஆறுதல் தேற்றாத புலன்களும், சுயநலத்தின் உருவாய் உருப்பெற்ற அவனுக்கு என்ன வேண்டுமாம்?
தன் சுதந்திரம் தன் மகிழ்ச்சி என அனுபவித்து கழிக்க துடிக்கும் மனம், தன்னை போல தேடல் உள்ளவள் தான் அவள், என அறியாத, அறிந்து கொள்ள முற்படாத அவலத்தின் அக்கறை காணாத அவனுக்கு என்ன வேண்டுமாம்?
தவறுகளை ஏற்றுக் கொள்வது, விட்டுக் கொடுப்பது, மன்னிப்பது பலவீனத்தின் அடையாளம் என எண்ணிக்கொண்ட, அன்பை முன்னிலைப்படுத்தாத எதுவொன்றும் பலவீனம் தான் என அறியாத, அவளின் குறைந்தபட்ச ஆசைகளுக்கும், அன்பிற்கும் செவிமடுக்காத அவனின் அடக்குமுறைகளுக்கு என்ன வேண்டுமாம்?
சக மனிதனின் உதவியின்றி ஒரு நாளையும் முழுதாக கடக்க முடியாத சமூகத்தில் வாழும் போதும் கூட, தான் என்ற பெருமை பேசும் தன் அடையாளம் காட்டிக் கொள்ள முற்படுவது நாகரிகத்தின் இழுக்கென அறியாது, திமிரென தெரியும் அவனுக்கு என்ன வேண்டுமாம்?
இலக்கியத்திலும் சரி வரலாற்றிலும் சரி வாழ்க்கையிலும் சரி, உனக்கும் சேர்த்து நானே யோசிப்பேன், உன் உணர்வுகளை நானே தீர்மானிப்பேன், உன் ஆசைகளை நானே நிறைவேற்றுவேன், உன் தேவைகளை நானே தீர்த்து வைப்பேன் நான் இன்றி நீ இல்லை என தான் செய்யும் ஆளுமையும், அதிகாரமும் அவசியம் இல்லை இனியும், அவள் அதை விரும்பவில்லை எனவும் அறியாத அவனுக்கு என்ன வேண்டுமாம்?
இன்னொரு ஜென்மம் பெண்ணாக பிறந்திடக் கூடாது என்று சொல்லாத ஒருத்தி இல்லை என்பது தான் யதார்த்தம் என, அடுத்தவருக்காக வாழ இங்கு எவரும் பிறக்கவில்லை, தன்னைப் போல வாழவே எவரும் என, சரியான அறிவை பெற்று அன்புடன் அறத்துடன் நிறைவாக வாழப் பழக வேண்டும் என்று சொல்லுங்கள் முதலில் அவன்களிடம்..!

Really super...... I think this blog should be read by every toxic boys in this world.... Being a woman my heart full thanks for this writings.
ReplyDeleteThanks for the kind words. Let's do..
Delete