எழுதத் தவறிய உணர்வுகள் - 1
நீண்ட நாட்கள் ஆக எழுதுவதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்க ஏதேதோ காரணங்கள் வந்து சேர, அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் அரைகுறையாய் வாசித்த பதிவுகள், வேலை செய்து கொண்டே கேட்ட ஒலிப்பதிவு கட்டுரைகள் ஏற்படுத்திய உணர்வுகளை, நிதானித்து நினைவுபடுத்திக் கொள்ளவாவது இதை எழுதிய ஆக வேண்டும் என்ற எண்ணம் இன்று. கொஞ்சம் அவகாசம் ஏற்படுத்தித் தந்த சூழ்நிலைக்கும், தாங்க முடியாத இந்த உணர்வின் பெருக்கைக் கொஞ்சம் கொட்டித் தீர்க்க துணிந்த மனதிற்கும் நன்றி.
அத்தனை உணர்வுகளையும் அடித்தல் திருத்தலோடு அனுமதித்து வாங்கிக் கொண்டு, மிகைப்படுத்தாமலும் , குறைக்காமலும் உள்ளபடியே அதை உணர்த்தும் இந்த நண்பர்களுடன் நேரம் ஒதுக்காமல் இருக்க எப்படித்தான் என்னால் முடிந்ததோ? எனக்காகவே காத்திருக்கும் என் நாட்குறிப்பும், எழுதுகோலும் தான் அவர்கள்.
மனித வாழ்க்கையில் கடின காலமென்ற ஒரு காலம் எல்லோருக்கும் வரும். ஆனால் மொத்தத் துயரத்தின் சாயலென்ற காலமொன்று விடாது பின் தொடருமென்றால் என் பிறப்பில் நான் செய்த பிழையன்றி பிரிதொரு காரணம் இருந்திட போவதில்லை என்பதே அந்த நேரத்திற்கான ஆறுதல்.
பிரச்சனை எங்கு? எப்படி? எதனால்? யாரால்? உருவாகின்றது என்பதெல்லாம் கணிக்க முடியாத ஒன்று. இதனால் தான் இப்படி என்று நம்மால் ஒரு காரணம் சொல்லி நிச்சயமாக தப்பிச்செல்ல முடியாது. வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள் என்று ஜெயகாந்தன் சொல்வது நினைவிற்கு வந்தாலும், நம்மால் முடிந்ததெல்லாம் சரி, தவறுகளைக் கடந்து, எதுவான போதும் அவற்றைக் கடந்து வருவதற்கான பயணத்தை தொடங்குவதுதான்.
மனிதர்களைச் சொல்லி பிரயோஜனம் இல்லை. பெருங்காட்டுக்குள் பெய்யும் பெருமழை போல, ஒவ்வொருவரின் சூழ்நிலையும் அவர்களின் மனதிற்குள் தாளாத,தவிர்க்க முடியாத உணர்வுகளை நிறைத்துக் கொண்டே இருக்கிறது. இங்கு யாரையும் வெறுக்கவும் முடியாது வேண்டவே வேண்டாமென்று கடந்து போகவும் முடியாது. இவர் தான் காரணமென்று சுட்டிக்காட்டி குற்ற உணர்வுக்குள் ஒருவரைத் தள்ளவும் முடியாது. தாளாத துன்பத்துக்கெல்லாம் அருமருந்து இதே மனிதர்களிடமே தான் ஒளிந்திருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.
அதனால் தான் என்னவோ பிறரின் மீதான நம்பிக்கை ,நம்பிக்கையின்மை என்ற இரு நிலைகளைத் தாண்டி நம்பிக்கையை கடந்து செல்லுதல் என்ற நிலையை மனம் ஏற்றுக் கொண்டு அமைதி அடைகிறது. நம்பிக்கை உடையும் போது வரும் ஆற்றாமையோடும், நம்பிக்கையின்மையின் துயரத்தோடும் உறவாட விரும்பாத மனம், நிபந்தனை அற்ற நம்பிக்கைக்கும், அதன் விளைவுகள் எதுவாயினும் கடந்து வர வேண்டும் என சிந்திப்பதை இயல்பு என ஏற்றுக்கொள்ள பழகிவிட்டது.
ஒவ்வொரு அனுபவங்களும் கற்றுத் தரும் நிகழ்வுகளை ஏற்றுக் கொண்டு நேற்றையை விட இன்று தன்னை மேம்படுத்திக் கொள்ள நம் வழக்கமான செயல்களை சிறப்பாகச் செய்ய பழகிக் கொள்ள, இது தனியான பயணம் என்று சொல்வதை விட உனக்கான பயணம் என்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்காக நண்பர்கள் உறவினர்கள் யாவரும் வேண்டாம் என்று இல்லை, அதையும் தாண்டிய, நீ மட்டும் உனக்கு எப்போதும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள நினைவுபடுத்தவே இந்த பதிவு.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அவ்வளவு வலிமையெல்லாம் இல்லை சற்றழுத்திப் பிடித்தால் உடைந்துவிடும் மனதிற்கு, எத்தனை முறை உடைந்தாலும் மீண்டும் புன்னகைக்க, மீண்டும் நேசிக்க, மீண்டும் நம்பிக்கை வைக்க, மீண்டும் முதலிலிருந்து தொடங்க கற்றுக் கொடுக்கும் உன் வலிமை போதும் தானே, வாழ்ந்து களித்துவிட. போர்க்களத்தில் பிறக்கும் பூக்களைப் போல, மீளும் நொடியில் உனக்கென்று இருக்கும் பெரும் ஆறுதல் உன்னைத்தவிர வேறொன்றும் இருக்கப்போவதில்லை.
நீயே ஒளி நீ தான் வழி...

Comments
Post a Comment