பறவையே எங்கு இருக்கிறாய் - A memorable Fly
யுவன் + நா முத்துகுமார் + ராம் கூட்டணியின் இசைக்கும், கவிதைக்கும், பாடலின் கதை களத்திற்கும் ஆன பிணைப்பு மனதை இனம் புரியாத உனர்வுகளுக்குள் அழைத்துச் சென்று அனுபவத்தின் நினைவுகளை அசை போட வைத்து விட்டு, காதல் மட்டுமின்றி அதனோடு இணைந்த வாழ்வியல், நம்பிக்கை, ஏக்கம் , துள்ளல் என ஒவ்வொன்றையும் தட்டி கொடுத்து புத்துணர்வோடு வழி அனுப்பி வைக்கும் தோழமை அது.
அதில் முதலில் அறிமுகம் ஆகி இன்னும் கேட்கும் போதெல்லாம் மனதை வருடும், பறவையே எங்கு இருக்கிறாய்? பற்றி எப்படி பதிவிடமால் இருந்தேன்.
முதல் முறையாக பறக்கும் பறவையின் உள்ளுணர்வை பாடல் வழியே விவரித்தால் இப்படி தான் இருக்குமோ என்பதில் ஆச்சரியம் துளியும் இல்லை.
வாழ்வின் மீதான கடைசி நம்பிக்கையாக தன் காதலியிடம் (ஆனந்தி) இருந்து கிடைத்த முதல் கடிதத்தை பெற்ற காதலன்(பிரபா)
வாசிக்கும் வசனங்களுடன் துவங்கும் பாடல். காதொலிப்பான் (Headphones) வழியே கேட்கும் போது இடது பக்கம் காதலனும், வலது பக்கம் காதலியும் வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது யுவனின் குறியீடு.
பிரபா,
நீ என்ன தேடி இருபன்னு எனக்கு தெரியும்…
நானும் அம்மாவும் இங்க மகாராஷ்டிரா’ல துரத்து மாமா வீட்டுல இருக்கோம்….
நீ வரதுகோ லெட்டர் எழுதுரதுகோ ஏத்த சமயம் வர்றபோ நான் சொல்லறேன்…
நேரத்துக்கு சாப்புடு… வாரத்துக்கு முணு நாளாவது குளி…
அந்த ‘socks தொவச்சு போடு.. நெகம் கடிக்காத… கடவுளை வேண்டிக்கோ..
ஆனந்தி
ராமின் கதைக்கள அறிமுகம் எளிமையான வரிகளில் இருப்பதாக தோன்றினாலும், பாடலுக்கான மொத்த சூழலையும் கேட்பவருக்கு கடத்தி தயார்படுத்தும் முயற்சி..
முகவரி முழுமை பெறாத அந்த கடிதத்துக்கு பதில் தர புறப்படும் பிரபாவின், ஆனந்தி உடன் ஆன நினைவுகள், ஆசைகள், ஏக்கம் கலந்த தேடல் பயணம் தான் பாடல்.
"பறவையே எங்கு இருக்கிறாய், பறக்கவே என்னை அழைக்கிறாய்"என துவங்கும் இளையராஜாவின் குரல் நம்மையும் பிரபாவுடன் அழைத்துச் செல்கிறது. காந்தமாக, கம்பீரமாக, சோகமாக, நம்பிக்கையாக, ஏக்கமாக வரிகளின் தன்மைக்கு ஏற்ப அழுத்தியும் தளர்த்தியும் அவர் செய்யும் மாயத்திற்கு மயங்கி போகிறது மனம்.
மனதின் விளக்க முடியாத உணர்வுகளை கவிதைகளாய் கொண்டு வந்து சேர்ப்பதில் நா முத்துக்குமார் தவிர்க்க முடியாத கவிஞர். இப்பாடலின் வரிகள் அனைத்தும் கவிதைகள் தான். எளிமையான வார்த்தைகளுக்குள் ஆழமான அர்த்தங்களை வைத்து தைக்கும் முத்துக்குமாரின் வரிகள் உணர்வுகளோடு உரையாட தவறுவதில்லை, இது போன்ற கதைக்களத்திற்கு இவரின் வரிகள் இன்னும் ஆழம்.
உதாரணமாக சில வரிகள்,
"நீ போட்ட கடிதத்தின்
வரிகள் கடலாக அதில்
மிதந்தேனே பெண்ணே
நானும் படகாக,
கதை பேசிக்
கொண்டே வா காற்றோடு
போவோம் உரையாடல்
தீர்ந்தாலும் உன் மௌனங்கள்
போதும்
இந்த புல் பூண்டும்
பறவையாவும் போதாதா
இனி பூலோகம் முழுதும்
அழகாய் போகாதா
இதோ இதோ இந்த
பயணத்திலே இது போதும்
கண்மணி வேறென்ன நானும்
கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே
இந்த நொடியில் என்றும்
வாழ்வேன்
இந்த நிகழ்காலம்
இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள்
இன்றுடன் முடியாதா?
இவ்வளவு எளிமையாக அதே நேரம் உணர்வு பூர்வமாக எழுதும் முத்துக்குமாரை எப்படி தவிர்க்க முடியும்.
யுவனின் உணர்ச்சிகரமான இசை அமைப்பு பாடல் முழுவதும் மனம் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பின்னணி mild drummings உடன் கலந்து வரும் strings முழுமை பெறாத ஒரு உணர்வின் வெளிப்பாடாக, இரயில் பயணத்தை ஒத்த நகர்வாக கடத்தி செல்லும். முதல் மற்றும் இரண்டாம் சரணத்திற்கு பிறகு வரும் guitar bits, தேடலின் நிலையில்லா தன்மையோடு, நிகழ்வுகளின் சுவடுகளை ஏற்றுகொண்ட மனதின் உணர்வின் வெளிப்பாடு. ரீங்காரம்
வரும் இடங்கள் எல்லாம் காற்றின் மெய் தீண்டல்கள்.

Comments
Post a Comment