நல்லை அல்லை




கல்லூரியின் மூன்றாம் ஆண்டின் போது திரைப்படமாக கண்ட போது இவ்வளவு ஆழமாக ரசித்திடவில்லை, காற்று வெளியிடை திரைப்படத்தின் நல்லை அல்லை பாடலை.

அதற்குப் பின்னும் கூட பல முறைகள் கேட்டதுண்டு, ஆனால் இப்போது கேட்கும் போது  அதன் ஆழத்தை உணரும் அளவிற்கு மனம் பக்குவப்பட்டு விட்டது போல.


சரி விடயத்திற்கு வருவோம், 

It is not fair... என்பதே  நல்லை அல்லையின் பொருள்.

அதில் என்னடா சிறப்பு என்று கேட்பது கேட்கின்றது, நல்லை அல்லை வார்த்தை குறுந்தொகையில் 47 ஆம்  பாடலில் தலைவி தலைவனுக்காக காத்திருக்கும் சூழலில் இடம்பெறுகிறது, 

பாடல்

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 

இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 

எல்லி வருநர் களவிற்கு 

நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 


தலைவன் வரும் வழியில் பெரிய வேங்கை மரங்கள் இருக்கும். அந்த மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடக்கும் . அந்த மரத்தின் அடியில் சில பல பாறைகள் இருக்கும். அந்த பாறைகளின் மேலும் ஒரு சில பூக்கள் உதிர்ந்து இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால், பாறையும், அதன் மேல் இருக்கும் பூக்களும் நிலவொளியில் ஏதோ ஒரு புலிக் குட்டி இருப்பது போலத் தெரியும். தலைவன் அதைக் கண்டு தயங்கலாம் . ஒரு வேளை புலியாக இருக்குமோ என்று நிறுத்தி நிதானித்து வரலாம். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்று நினைக்கிறாள்.

அது மட்டும் அல்ல, இந்த நிலவு இப்படி வெளிச்சம் போட்டு காண்பித்தால்  தங்கள் களவு ஒழுக்கம் வெளிப்பட்டு விடுமே என்று அஞ்சுகிறாள். யாருக்கும் தெரியாமல் , தலைவன் பதுங்கி பதுங்கி வர வேண்டும். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்றும் நினைக்கிறாள்.

நிலவே, நீ ஏன் இப்படி பிரகாசமாக ஒளி வீசுகிறாய். இப்படி ஒளி வீசுவது நல்லதற்கு இல்லை.  நீ ஒன்றும் நல்லவள் இல்லை என்கிறாள்.

அவளுக்கு அவன் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இரவில் வந்து அவனுக்காக காத்திருப்பாள் என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது?


அது மட்டும் அல்ல, காலம் தாழ்த்தி வரும் அவன் மேல் அவளுக்கு கோபம் இல்லை. நல்லை இல்லை என்று நிலவைத்தான் சாடுகிறாள்.

இவ்வளவு ஆழமான காதல் உணர்வுகளை கொண்ட நம் மக்களும், அதன் சுவடுகளை தாங்கி நிற்கும் தமிழின் செழுமையையும், அழகையும் எண்ணி மயிர்கூச்சிட செய்யாமல் எப்படி இருக்க முடியும்.  

சரி நான் இப்பாடலை விமர்சனம் செய்து,  விளம்பரம் செய்ய வரவில்லை, தமிழின் அழகை அதிசயத்தை இன்றைய இளம் தலைமுறைகள் ரசிக்கும் படி வார்த்தைகளை தேர்வு செய்தது மனதை பெரிதும்  ஈர்த்து  எழுத வைத்து விட்டது இப்பதிவினை.ரகுமானின் இசை நம்மை சங்க காதல் உலகத்திற்குள்  அழைத்து செல்லும் அதே வேளையில் அந்த சூழலின் உயிர்ப்பை  நமக்குள் கடத்துகிறது கார்க்கியின் வரிகள்.

உதாரணமாக, 


முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே

முகந்தொட  காத்திருந்தேன்.

மலர் என்ற நிலை விட்டு பூத்திருந்தாய்

மணம் கொள்ள காத்திருந்தேன்..

மகரந்தம் தேடி நுகரும் முன்னே

வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்..

நல்லை அல்லை நல்லை அல்லை

நாறும் பூவே நீ நல்லை அல்லை

நல்லை அல்லை நல்லை அல்லை

முல்லை கொள்ளை நீ நல்லை அல்லை.

 

முளை, அரும்பு, மொட்டு என்ற நிலைகளில் உன் முகம் பார்க்க/தொட காத்திருந்தேன்.

மலர் என்ற நிலை கடந்து பூவாக பூத்திருந்த நிலையில் மணம் முடிக்க காத்திருந்தேன்.

என் மகரந்தம் உன்னை தேடி அடைவதற்குள் வெயில் காட்டில் எங்கோ வீழ்ந்து விட்டாயே..!

மணம் வீசும் மலரே இது நல்லதற்க்கு  இல்லை. நல்லதற்க்கு இல்லை. முல்லை தோட்டமே நீ நல்லதற்கு இல்லை...

காதலயும் அதன் தவிப்பையும்  தவிர்க்க முடியாத அளவிற்கு அதன் உணர்வையும் காலம் கடந்தும் கடத்தும் தமிழின் செழுமை என்றும் நம் பெருமை. 

Comments

Popular Posts