மோகமுள்

 


இலக்கியம் எதற்காக வாசிக்க வேண்டும் என்ற கேள்வி எப்போதும் எழுவதுண்டு , அதற்கான பதிலாக, ஒரு மனிதனின் அக உலகம், அதில் இருக்கும் சிக்கல்கள், அதன் கடினமான துக்கங்கள், சித்திரவதைகள், மகிழ்ச்சி, அதன் அழகியல், கவித்துவம் என்ற விளக்க இயலா உணர்வுகளை, கதை மாந்தர் மற்றும் கதைக்களத்தின் வழியே தெளிந்து கண்டடைய ஒரு வாய்ப்பினை வழங்குகிறது என்று தோன்றும்.

இத்தனை நாட்களாக என்னை ஒதுக்கி வைத்திருக்கிறாயே என்ற ஏக்கத்துடன் இருந்த மோகமுள் நாவலுக்கு இன்று தான் ஆறுதல் சொல்லி முடிக்க முடிந்தது. மோகமுள் என்பது நிறைய விசயங்களைப் பற்றியது. பெயர் குறிப்பிடுவது போல் ஆசை பற்றி மட்டுமின்றி, நாவலின் புறப்பொருள் ஆன இசையைப் பற்றி மட்டுமின்றி; மக்கள் மற்றும் உறவுகளைப் பற்றியது மட்டுமின்றி. இது அநேகமாக ஒரு இளைஞன் தனது பிறப்பின் அழைப்பைக் கண்டுபிடித்து, அவனது சொந்த உணர்வுகள் மற்றும் நிகழ்வுகளின் வழியே ஒரு முழுமனிதனாக முதிர்ச்சியடைவதைப் பற்றியது என்றே நான் உணர்கிறேன். மேலும் இந்த பதிவினால் நான் உணர்வதை முழுவதும் வெளிப்படுத்தி விட முடியுமா என்றும் தோன்றவில்லை? மற்ற கதாபாத்திரங்களின் வழியே கதையை வாசிக்கும் போது வேறு பரிமாணங்களும் தோன்றலாம்.

தி.ஜா வின் படைப்புகளின் கண்ணோட்டம், மனித உறவுகள் நியதிகளுக்கு கட்டுப்பட்டவை அல்ல, உணர்ச்சிகளுக்கும் அதை உருவாக்கும் சூழலுக்கும் இணங்கியவையே என்பதில் எதிர்ப்புகள் ஏதுமின்றி உடன்படுகிறேன் நானும்.

ஆண்களின் பார்வையில் நாவலின் கதைப்போக்கு அமைந்தது வழக்கமாக தோன்றினாலும், அவனின் விதியையும், விதிவிலக்கையும் உருவாக்குபவர்கள் பெண்களே என்ற கதைக்கரு அனுபவத்தின் யதார்த்தம்.

நாவல் முழுதும் வரும் உரையாடல்கள் மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றின் தேவைகளையும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றது. அதே போல் காமம் என்ற தணலைக் கதையில் கையாண்டிருக்கும் விதம் விரசமாகத் தோன்றாமல் மனிதனின் அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே தோன்றுகிறது.

யமுனா எனும் கதாபாத்திரம், வாசகனின் மனதில் உயிரும் ஒளியுமுள்ள ஜீவனாக நிலைக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒன்றை சுருங்க சொல்ல வேண்டுமென்றால், அவமதிப்புகளிலும், புறக்கணிப்புகளிலும் வறுமையிலுமிருந்து தன் அகவலிமையால்(நேர்மை, யோசனை, கௌரவ புத்தி) நிமிரும் அவளின் தன்னலமற்ற தவிப்பின் நிலையும், அவளின் ஆளுமையும். அத்தகைய மனிதர்களிடம் தானே மனம் தஞ்சமடையும் இல்லையா?

நாவலின் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் திறக்கப்படும் நுண் தளங்கள் ஏற்படுத்தும் பரவசம், கதையின் சுவாரசியத்தின் காரணமாக மட்டும் இல்லாமல், அந்த படைப்பு மொழியுடனும், கதாபாத்திரங்களை நம் அனுபவத்தில் காணும் மனிதர்களோடு உணர வைத்த இயல்பிலும்,அதன் மீது வைக்கப்படும் விமர்சன கட்டுப்பாடுகளை காலங்கள் கடக்க தன் நிலையில் உடைத்தெறிவதும் கூட காரணங்களாக அமைகிறது.

வாசிப்பின் முடிவில் ஏராளமான சிந்தனைகளும், கேள்விகளும் தோன்றாமல் இல்லை. நம்மிலிருக்கும் அந்தரங்கக் கதவுகளை மீண்டுமொரு முறைத் தட்டிப் பார்த்ததாகத் தோன்றுகிறது. கதையின் பல பகுதியில் நம்மை நாமே நிலைக்கண்ணாடி முன்னிறுத்திப் பார்த்தது போன்ற உணர்வும் ஏற்படுகிறது. நாவலின் பல நிகழ்வுகளில் நம் அனுபவத்திற்கும், அறிவிற்கும், உணர்வுக்கும் வேறு வேறு பதில்களை அமையுமாறு கேள்விகளை கேட்டு சவால் விடுக்கும் சூழ்நிலைகள், 
பெற்ற அனுபவத்தினை கேட்கவா, கற்ற அறிவினை மதிக்கவா, சூழலின் உணர்வினை அனுமதிக்கவா என்ற தவிப்பின் புள்ளியில் சிந்திக்க வைப்பது மோகமுள்ளின் கூர்மை.

இம்மோகத்திலிருந்து விடுபட்டோர் சிலரே....

Comments

Popular Posts