அன்பிற்கு உண்டோ வரையறைகளும் வரைமுறைகளும்?
காற்றில் கரைந்த பின்,தெளிந்த புத்தியுடன் வாழ்விற்கான நிலைமைகளை உணர்ந்து உருவானது அவளின் மீதான பிரியம்.
குறுந்தொகையி்ன் பொருளை அறிந்திருந்த இவன் உணர்ந்தது அவளுக்கான காத்திருப்பிலும், அவளை பிரிந்திருந்த நாள்களின் தனிமையிலும் தான், அணிலாடிக் கிடந்த இவனின் முன்றிலில் அவளின் அறிமுகம் பூங்காற்றின் வசந்தத்தையும், பூக்களின் வாசத்தையும் உணர வைத்தது.
எது காதல் என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் எங்கும் கிடைக்காத போதும், சூழலும் வயதும் அதை பற்றி அறியவும், அதற்கான தேவையை உணர்த்தவும் ஒரு போதும் தவறியதில்லை அன்று. அவளை இவன் எப்போது முதலில் சந்தித்தேன் என்று யோசனை பிறக்கும் போதெல்லாம், எதிர்பாராத காலநிலையில் ஓர் நாள் பெய்த பெரு மழையின் சாரலில் நான் நனைந்தது தான் நினைவின் அடுக்குகளில் இருந்து கிளம்புகிறது இன்றும்.
அறிமுகம் ஆகும் அத்தனை முகங்களும் அடி மனதோடு பதிந்து விடுவதில்லை அவ்வளவு எளிதாக, தனக்கான ஏதோ ஒன்றை தேடி தொலைத்த மனது அதைக் கொணரும் இதயத்தை தான் மறக்க அனுமதிப்பதில்லை.
அது காதலாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? இல்லை அதற்கு காதல் என்று பெயர் வைத்துக் கொள்ள இவன் உடன்பட்டிருக்க வேண்டுமா என்ன? உடன்பட வேண்டும் எனில் அதை இவன் அவளிடம் உரைக்க வேண்டுமே. உயிரியலில் ஆணோ பெண்ணோ தன் விருப்பத்தை தெரிவித்து தன் இணையின் இசைவினைப் பெற மெனக்கெட வேண்டும் தானே. எளிதாக எதையும் பெற அனுமதிக்காத இயற்கையின் சுவாரசியம் அடைந்த பிறகு எளிமையாகி இயல்பாகிவிடும் கதையின் கருப்பொருள் காதலில் அன்பிற்கு என்ன விதிவிலக்கோ? அதன் அடிநாதமாக தான் இவனுள் பிறந்ததோ சில புதிதான மாற்றங்கள் அவளைக் கண்ட பின்பு.
அவளுக்கு பிடித்த ஒருவனாக இவன் மாற வேண்டுமா என்ன?மாறிய இவனைத்தான் அவளுக்குப் பிடிக்குமா என்ன? அவளுக்கு பிடித்து போன இவனால் அவளிடம் இயல்பாய் இருந்திட முடியுமா என்ன? மனதோடு பல மாயம் செய்யும் உணர்வுகளுக்குள் தொலைந்து போன ஒருவனை அவ்வளவு எளிதாக அறிவால் மீட்டு வந்து விட முடியுமா என்ன? எதனால் அந்த உள்ளுணர்வு இவனை அறியாமல் இவனுக்குள் நிஜமாகவே இவனை அறியாமல் தான் நிகழ்ந்ததா? ஆனால் நிகழ்ந்து விட்டது என்பது மட்டும் நிஜம்.
மழை மேகம் தேடும் மயில் போல தான் தேடியது மனதும் அவளை, ஒவ்வொரு நாளின் விடியலின் போதும் கண் விழிப்பதற்கான காரணங்களில் முதல் காரணமாக அவளை காண வேண்டும் என்ற ஆவல் வந்ததில் ஆச்சரியம் அதிகமில்லை, அது நாள் வரை இல்லாத ஒரு அக்கரையும், கரிசனமும் இவன் ஆடைகளின் மீதும் தலை முடியின் மீதும் கூடவே.
அறிமுகம் இல்லாத அந்தாதி அவளால் இவனுள் உருவான மூன்றாம் உலகப்போருக்கு, அவளின் தினசரி தரிசனங்களும், இவனை கடந்து செல்கையில் கிடைக்காத கடைக்கண் பார்வைகளும், பிறக்கும் முன்னே மறைந்து போகும் வார்த்தைகளும் ஆயுதங்கள் வழங்கி அழகு பார்க்க தவறவில்லை. இவன் அவளை பார்க்கிறேனா, இல்லை அவள் இவனை பார்க்கிறாளா என பார்த்து கொள்ள முயற்சித்ததில் பார்த்துக்கொண்டனர் இருவரும்,
பார்த்தவுடன் காதல் என்ற பிற்போக்கு சினிமாவின் கற்பிதங்கள் பொய் என்பதற்கு இவனும் ஒரு சாட்சி கையழுத்து போட்டு விட்டு தொடருகின்றேன் .
சிறகுகள் விரியட்டும், தொடர்வோம்.



Comments
Post a Comment