எழுதத் தவறிய உணர்வுகள் - 2
சில நேரங்களில் உடைந்த கண்ணாடி துண்டுகளை ஒட்ட முயற்சிப்பது போல வார்த்தைகளை கவனமுடன் தேர்வு செய்கிறேன். உடைந்த மனதின் கோபமும் வருத்தமும் சூழ்நிலையை இன்னும் ஆழமாக்கி விடக்கூடாதே என்று.
உணர்வுகளற்ற, அர்த்தம் சேர்க்காத, ஆறுதல் வழங்காத வார்த்தைகளை தேர்வு செய்ய வேண்டாம் என்றும் யோசிக்கிறேன், இல்லை மௌனம் போதுமென கடக்கவும் முயற்சிக்கிறேன். வார்த்தைகளை போல அவை குறிப்பிட்டு நிற்காமல், தடுமாறும் மனதின் நிலையை நிதானமாக மறு பரிசீலனை செய்யும் வாய்ப்பை வழங்குவதால் என்னவோ?
இப்போதெல்லாம் உடன் நிற்கிறேன் என்று, காயங்களை வர்ணித்தும், கொண்டாடியும் அதை ஆழப்படுத்தும் வழக்கமான கவிதைகளைப் போல இல்லாமல், மனதின் காயங்களுக்கு மருந்திட முயற்சிக்கும் வார்த்தைகளை கொண்டே எழுத முயற்சிக்கிறேன் அது விமர்சனம் என்றாலும் கூட.
ஆனால் உறவுகளில் எழும் புறக்கணிப்பு புகார்களைப் பற்றி எழுதும் பொழுது அங்கு உரையாடல்கள் தேய்ந்துவிடுகிறது, சொற்களில் இருப்பதில்லை அதே உற்சாகம்.. முன் எப்போதும் இல்லாதது போல் என்ற உணர்வும் கூடவே.
முன் எப்போதும் போல என்பதின் ஆழத்தில் நான் தேடுகிறேன் போல அன்று எனக்கு பரிட்சயமான உன்னை, அது போல நீயும் தேடக்கூடும் உனக்கு விருப்பமான என்னை. ஆம் நம் நினைவுகளில் பதிந்த அடையாளங்களையே தேட விரும்புகிறோம்.
ஆனால் அந்தத் தேடலே ஏமாற்றம், அந்த ஏமாற்றத்திற்கு நாம் வைக்கும் பெயர்கள் தான் புறக்கணிப்பு, நிராகரிப்பு, "முன்ன மாதிரி இல்ல", "நீ மாறிட்ட".
ஆனால், மாறியது நாமும் தானே. நம்மிடம் இல்லை அதே கனவுகள், அதே பார்வைகள், அதே சித்தாந்தம், அதே உணர்வுகள், அதே நாம். அது தானே மனித இயல்பும் கூட. காலங்களில் நாம் வளர்கிறோம், முன் இருந்ததை விட பார்வைகள் விசாலமாக சற்றே ஆழமாக. பொறுப்புகள், தேடல்கள், தேவைகள் என்ற மைய நீரோட்டங்கள் இழுத்துச் செல்வது தானே இந்த நவீன வாழ்வு.
இங்கு யாரும் யாரையும் புறக்கணிப்பதில்லை. உண்மையில், நாம் அவர்களுக்கோ அவர்கள் நமக்கோ பொருந்தி போக வேண்டிய அவசியம் இல்லாமல் தான் வளர்ந்துவிடுகிறோம். அதற்கும் அவசியம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறோம்.
நமக்கு தெரிந்த அவர்களை தேடாமல், அவர்களின் மாற்றத்தை ஏற்று புரிந்து கொண்டு நகரும் போது தான் உணர்கிறோம், யார் மீதும் எதன் மீதும் சலிப்புகளற்ற வருத்தங்களற்ற எதிர்பார்ப்புகளற்ற ஓர் வாழ்வு!

Comments
Post a Comment