எங்கிருந்து தொடங்குவது...?
எண்ணி துணிக கருமம் என வள்ளுவன் உரைத்தது செவிகளில் அறைந்த போதும், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும், கள பணிகளில் ஈடுபடுத்தி கொள்வதற்கும்
காலம் இல்லாமையை காரணம் காட்டிட காரியங்கள் தேட துவங்கி விடுகின்றது பெரும்பாலான வேளைகள்...
எதற்காக ஏன் என்றெல்லாம்
தெரியவில்லை,
ஆனால் எழுத வேண்டும் என்ற
எண்ணத்தின் துணையோடு சில நேரம் அமர்ந்த போது சிந்தனையில் சிறையில் இருந்து விடுதலை அடைந்தன சில வாசகங்கள்...
புதிய கல்வி கொள்கை , இணைய வழி வகுப்பு , திறன் அடிப்படையில் கல்வி, அனைத்திற்கும் நுழைவு தேர்வு என மாறுதல்கள் பல,
மாற்றங்களை நோக்கி ஒரு புறம்..
கொள்ளை நோய் ஓன்று
வாசல் வரை நின்று,
எதிர்கால நம்பிக்கையின் வாசலை பூட்டக்
காத்திருக்கின்றது ஒரு புறம்...
செய்திகளும் சரி,
தேடலின் பொருளும் சரி,
உனக்கு இதை வைத்து கொள்,
இல்லை இது வேண்டாமா
அதை எடுத்துக் கொள்,
என விருப்புகளையும்
திணிப்புகளாய் அள்ளி கொடுத்து விட்டு, விவாதங்களில் மாற்றம் தேடும்
சமூகத்தின் வளர்ச்சி ஒரு புறம்...
அரசியலையும், மதத்தையும் அல்லது அவற்றின் சீர்திருத்தத்தைப் பற்றியும்,
நானும் எழுதவும் பேசவும் கூடிய தெளிவை பெற வேண்டாம் எனவே விரும்புகின்ற மனதின் ஓட்டம் ஒரு புறம்...
(அதனை விட மேலான கடமைகள் இளைஞர்களிடம் இருக்கின்றது என்ற எண்ணத்தின் நம்பிக்கையோடு)...
சரி... தொடங்குகிறேன் இங்கிருந்தே,
"பார்வை இன்மையினால் சிறு வயதில் இருந்தே எதிர்கொண்ட சவால்கள் தான், தன்னை சாதிக்க தூண்டியது"
-என தோழி பூரண சுந்தரியின் வெற்றியை செய்தியாய் வாசித்த போது,
ஒரு கணம் அதற்க்கான அவரின் முயற்சிகளையும்,
அவர் சந்தித்த இடர் பாடுகளையும்,
இருளாய் போன அவரின் உலகில் ஒளியாய் தன்னை ஒளிரச் செய்ய,
அவர் எத்தனை பெரும் மாறுதல்களுக்கும், பயிற்சிகளுக்கும் தன்னை தயார்படுத்தியிருப்பார் என பட்டியலிட துவங்கி விட்டது மனதும்...
ஆம்
'கண்ணுடையர் என்பவர் கற்றோர்'
என வள்ளுவனின் வழியில் கல்வியின் கண்களால் இந்திய ஆட்சி பணி தேர்வில் தடம் பதித்து
தடமாய் திகழ்கின்றார்
தொடரும் தோழிகளுக்கு..
காரணங்கள் பல கூறி தன்னை சமாதானபடுத்தி கொண்டிருக்கலாம், இல்லை தன் குறையை குறையாய்
எண்ணிக்கூண்டு கிளியாய் அடைந்திருந்திருக்கலாம்,
இப்படி தன் நிலைமையின் சம்பிரதாய நடவடிக்கைகளுக்கு இடையே,
எது அவரை தன் இலக்கை நோக்கி
சிறகடிக்க செய்திருக்கும்? (1)
ஏதோ ஒரு நம்பிம்கை, தனக்கான விருப்பம், அதற்கான முயற்சி, அதை நோக்கிய தேடல், தயார் படுத்துதல், தளராத உழைப்பு என எப்படி சாத்தியமாகி போனது அவருக்கு?
என தன்னோடு ஒப்பிட்டளவில் தனக்குள் தேடிய போது சில பதில்கள் இவனுக்கு...
இவன் அரசு பள்ளி மாணவனாய்
இருந்ததால் என்னவோ,
பெற்றோரின் பாரம் குறைத்திடவும், திறமையின் முத்தான ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைத்திடவும்,
வேறுபாடின்றி பழகும் நண்பர்களின்
வாய்ப்பும் கிட்டியது
கூடவே அரசின் உதவிகளோடு...
உயிர் வாழ முட்களும் கூட பறவையின் கூடாய் மாறிடும் என்பதாக தான் தெரிகின்றது இன்னும் இவனின் பள்ளி இவனது நினைவில்...
எப்போதும் மாணவனாக பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் எழும் அந்த முதல் கேள்வி தான் இவனுக்கும்,
ஏன் படிக்க வேண்டும்?
எதற்காக படிக்க வேண்டும்?
அந்த கேள்விகளுக்கு அப்போது இவனுக்கு விடையாய் தெரிந்ததெல்லாம்,
இவன் என்ன பாடம் படிக்கின்றான் என அறியாத?
மேல்நிலைப்பள்ளியில் எந்த பாட பிரிவை தேர்ந்தெடுக்க போகிறான் என்று சொல்ல தெரியாத ?
பள்ளியின் முதல் மாணவனாக தன் தரவரிசை அட்டையை காண்பிக்கும் போது அதில் மதிப்பெண்களின் முக்கியத்துவம் அறிய முடியாத?
ஏன் அதில் கையொப்பம் இடும்
அளவில் கூட படித்திடாத..
ஆனால் இவனை படிக்க வைத்திட
இத்தனை ஆர்வம் காட்டிய,
இவன் கல்லூரி படிப்பை தேர்வு செய்து படிக்க, தன்னை அடமானம் வைத்து, இவனையும் இவன் படிப்பையும் மட்டும் சொத்தாய் நினைத்து உழைத்த அவன் பெற்றோர்கள் தான் வருவதுண்டு....
அவர்கள் படிக்காத போது இவனை ஏன் படிக்க வைக்க வேண்டும்?
இத்தனை பெரும்பாடு பட்டு இவனை ஏன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்?
இவன் தொடர்வான் விடைகளோடு...


Comments
Post a Comment