குடைக்குள் வீழ்ந்த மழைத்துளிகள்
ஓர் குடைக்குள்
ஓர் நிழலாய்
கரம் பிடித்து நாம்
நடந்த வீதியில் கோலம் போட்டது
மழை துளிகள்,
மழை இன்னும் தூராதா?
தூரங்கள் இன்னும் நீளாதா?
என மனதும் இதயமும் ஏங்கி நின்ற போது,
என்னை தாங்கி இருந்தன உந்தன்
முந்தானை புடவை,
குடை எதற்கு உந்தன் முந்தானை பாசத்திற்கு முன்னால்?
என நான் தள்ளிய போது,
கொட்டிய மழையை திட்டி தீர்த்தவள் இப்போதுதான் பெய்ய வேண்டுமா பாழாய் போன மழை என்னவர் மீதென்று காட்டிய காதலில் நனைந்து தான் போனேன் நானும் அன்று. இத்தனை பெரிய நினைவுகளை சேர்த்த அந்த மழையை,
அத்தனை பெரிய வார்தைகளால் சிறை வைத்து விடாதே,
இன்னும் சில தூரல்கள் சேரட்டும் இந்த குடைக்குள் இந்த பிறவியின் பயணத்திற்கு உன்னால் இன்னும் கொஞ்சம் அர்த்தம் சேர்க்க என்ற போது, அர்த்தம் சேர்க்க இந்த நேரம் மட்டும் போதுமோ? மழையின் சாரலாய் காதல் செய்ய,
தூரலாய் சேவை செய்ய ஆயுள் வரை நான் இருக்கும் போது! என அவள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்கள் மேகமென கலைந்ததை இன்று வரை நம்ப மறுக்கும் இதயத்திற்கு எப்படி சொல்வேன்?
முன்னொரு நாளில் இந்த மழையில் என்னவளுடன் நான் கொண்ட காதலை! என்னவள் என் மீது கொண்ட காதலை! அகவை அறுபது தாண்டிய போதும் அளவில் சிறிதும் குறையாத அந்த காதலின் ஆழத்தை! மழையினும் தூய அந்த மனதினை! நான் பாதியில் தொலைத்துவிட்டேன் என!
இன்னும் எத்தனை மழை துளிகள் நனைத்த போதும் ஒன்றும் இதயம் நனைக்க போவதில்லை,
அன்று குடைக்குள் வீழ்ந்த தூரலை போல மீண்டும் ஒரு முறை.. இருந்தும் நனைகிறேன் நினைத்துக் கொண்டே உடன் பொழிவது நீயாக இருப்பாய் என...
-இந்த எழுபது வயது காதலன்... அவரின் தனிமையின் பயணத்தில் இன்று,
தூரல்கள் கொட்டி தீர்ந்தது,
வெள்ளமோ பெருகி நின்றது அவர் விழிகளில்...



Comments
Post a Comment