நவீன சாமானியன் அவன்
கடிகார முட்களுடன்
பயணித்த கால்களுடன்
பணி முடித்து திரும்பும் அவன்,
.
அலுத்துப்போன அலுவலக அலுவல்களுடன்
போராடி பழகியவன்
இறகுகள் இழந்த பறவையின்
படபடப்பையே பிரதிபலிக்கின்றான்
குளிருட்டப்பட்ட கூண்டிற்குள்,
.
விளங்காமல் மனதினுள்
சேர்ந்த தினசரி குப்பை குழப்பங்களை புகையாய்
பற்ற வைக்கின்றான் விரல்களுகிடையே,
.
மாலையின் உற்சாகத்தை
மீட்டெடுக்க உடன்பட்டவனாய்
உஸ் உஸ் என்று உருஞ்சுகின்றான்
தேநீரையும் தெருமுனை பெட்டிகடையில்,
.
வானமா எல்லை என விரியும் காலையும், வாடிப்போன முகத்தோடு முடியும் மாலையும் வாடிக்கையாகிப் போன மனதின் அமைதியின்மையோடு இருள் சூழ்வது அறியாதவனாய்
வெறித்து பார்க்கின்றான்
வீதியில் இரையும் வண்டிகளை,
.
இரவுக்குள் அவனை இசைய வைக்கும் இல்லாளின் நினைவு வரவே இறுக்கமாக முறுக்குகின்றான் தன் இரு சக்கர வாகனத்தை திருப்பிக் கொண்டு,
.
அலுவலக சாயல் அப்பி கிடந்த முகத்தை அலம்பி கழுவி நின்றவன்,
நினைவுகளின் மடிப்புகளில்
சேமித்திருந்த வார்த்தைகளை
மனைவியிடமும் குழந்தையிடமும்
செலவு செய்ய துணிந்து நிற்கின்றான்,
அதில் முயன்றும் தோற்றுப் போகின்றான் முகம் புதைத்து மகள் கொடுத்த முத்தத்தில் ...
அதுவரை இயந்திரமாய் இயங்கி கொண்டிருந்த அவனின் இதயமும்
'அப்பா' என்றழைத்த ஹாரன் சத்தம் கேட்டு ஓரம் கட்டபட்டுவிட்டது.
இவ்வாறாக,
கொட்டும் பனிக் காட்டில் நடை பயணத்தின் நடுவே ஆங்காங்கே
கிடைக்கும் நெருப்பின் இதமாகவே
கழிகின்றது அவனது சில இரவுகளும் நிகழ்வுகளும்.



Comments
Post a Comment