முன்னாள் மாணவன்

 


இனம் புரியாத புது உணர்வு,
அருநாக் கயிறு கட்டியும் இடுப்பில் நிக்காத காற்சட்டையுடன்
பயந்து கொண்டே பையைத் தூக்கி கொண்டு நுழைந்த பள்ளிக்கூடத்தில்
முன்னாள் மாணவனாக நுழையும் இந்நாளில்...


அறிமுகம் இல்லாமல் அருகில் அமர்ந்த மாணவனை ஆருயிர் தோழனாய் மாற்றியதை
உணர்வதற்கு முன்பே,
அறிவோடும் பணிவோடும்
மனதோடு மாற்றங்களை
விதைத்து தகுதியான மாணவர்களாய் எங்களை
சமூகத்திற்கு அறிமுகம் செய்த
பள்ளிக்குள் நுழையும் போதே
நினைவின் மடிப்புகளில்
சேமித்து கிடந்த நினைவலைகள்
கரை மோத முயன்று விட்டன..


அள்ளி கொடுத்து குறையாத
செல்வத்தை அழகாய் கொடுப்பதில்
கை தேர்ந்த எம் பள்ளி ஆசிரியர்களுள் எவரை நினைவின் முன் நிறுத்தி நிகழ்வுகளை அசைக்க துவங்க,        எங்கிருந்து அதையும் துவங்க, எங்கு அது முடிந்தது, இல்லை அது எப்போது தான் முடிந்து போனது?
என்ற சிந்தனையில் வயப்பட்டு
ஆழ்ந்த விழிகளை,
அகல விரிக்க வைத்த கட்டிடங்களின் வளர்ச்சியின் உயரம் தான் என்ன..
அதன் அளவீடுகளாய் வருகை தந்த
மாணவர்களின் ஆர்வத்தின்                         ஆழம் தான் என்ன...


கனவுகளை நினைவுகளாக்க
கடவுளின் உதவியை பெற உடன்படாத மனங்களின்
சொந்தக்காரர்கள் கல்வியின்
கரம் பற்றி நடக்கும் என் பள்ளி மாணவர்கள், என்ற கருத்தில்
உடன்பட ஏராளமான காரணங்கள்
தாரளமாக வர துவங்கின
முதல் தலைமுறையில் முயன்று முத்தாய்ப்பாக வந்திருந்த முன்னாள் மாணவர்களை கண்ட போது..

கண்ணாடியாய் பிறந்த இதயங்கள்
காண்கின்ற காட்சியின் குறைகளை
நிவர்த்தி செய்ய வாய்ப்பளித்த போதும் மாணவர்களாய் ஆக்கியிருந்தன எங்களை, ஆம் அதை பழகிக் கடந்தவர்கள் அரசு பள்ளி மானவர்களாகத்தான் இருந்திட முடியும்...


ஊர் கூடி தேரிழுக்க
உடன் வந்து கரம் கொடுக்க
இத்தனை இதயங்கள் தயாராய் நிற்கும் போது,
உலகை வலம் வந்து விடமாட்டாளா
எம் பள்ளியின் கல்வித்தாய்...!


Comments

Popular Posts