முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே..









             


                                                                      
உன்னுடன் கடந்த                                  பொழுதுகள் எல்லாம்                            உயிருடன் கலந்து

உறைந்தே கிடந்து
போரிடும் பொழுதாய்
மாறிப் போகும் காலம்
கரையுமா?

கதைகள் தீர்த்த
கட்டில்கள் இரவும்
விரல்கள் கோர்த்த
விடியலின் உறவும்
கனவின் நினைவை
நிஜமென சேர்க்கும்
நாள்கள் தீருமா?

காதல் கொண்ட
முதல் நாள் இரவும்
மோதல் கொண்ட
பல நாள் இரவும்
இரவின் நினைப்பை
உன்னுடன் இழுக்கும்
கனவின் நீளம்
கண்கள் அறியுமா?

கரங்கள் பிடித்து
விரல்களும் கோர்த்து
வரங்கள் வாங்கி
வாழ்த்துக்கள் வாங்கி
மணந்து முடித்த
மலர்களின் மணமாய்
உந்தன் நினைவை
நெஞ்சினுள் நிறைக்கும்
இரவின் புதிரை
எப்படி தீர்ப்பேன்?


வலிகள் அறியா
வழிகளில் நடந்தேன்
வலிமையின் மொழியாய்
என்னுடன் பயின்றாய்
மொழியின் கவிதை
முழுமை பெறுமுன் முடித்தால்,
எங்கே பொருள் பெற?

காற்றின் ஒலியாய்
காலையின் ஒளியாய்
பகலும் இரவும்
பகிர்ந்தே மகிழ்ந்த
நினைவும் கனவும்
நித்தமும் சொல்லும்
உனது பெயரை
என்னுடன் சேர்த்தே,
உடைந்து போன
கண்ணாடி பிம்பமா?

முதல் கனவு முடிந்திடும்
முன்னமே தூக்கம் கலைந்ததே,
முதல் காதல் புரிந்திடும்
முன்னமே வாழ்க்கை தொலைந்ததே...

முதல் கனவு போதுமே
காதலா கண்கள் திறந்திடு,
முழு உயிராய் புதிதென
மீண்டு நீயும் உனக்கென பிறந்திடு...
வாழ்ந்திட புறப்படு...


Comments

Popular Posts