நினைவோ ஒரு பறவை
எத்தனை சுவடுகள் தான் அந்த நினைவின் தடங்களுக்கு ஆழமாக பதியாத போதும்அழுத்தமாகவே பதிந்து விடுகின்றன..
.
சில கணங்களில் அது சிலிர்க்க செய்கின்றன,பல கணங்களில் அது வலிக்கவும் செய்து விடுகின்றன,
சில நினைவோ காலங்களை கடந்து கொண்டு போய் அமர்த்தி விட்டு கதைகள் பேச வைத்து விடுகின்றன கடந்த காலங்களுடன்,
ஆம் நினைவுகள் எனும் பறவை, காலப் பயணத்திற்க்கான ஆக சிறந்த வாகனம் தான் போலும்...
.
அலுத்து போன அலுவல்களின் போராட்டம் முடித்து கிளம்பும் இரைச்சலின் அவசர வேகத்தில், போக்குவரத்து நெரிசலின் ஊடான இரு சக்கர வாகனத்தின் பயணத்திலும் கூட மனதினுள் சிறகடிக்க அப்பறவை தவறுவதில்லை.
.
இதில் தனிமையின் அமைதியிலும், இரவின் தனிமையிலும், அவற்றை கூண்டில் இட்டா அடைத்து விட முடியும்?
.
பள்ளிக்கூட மாணவனாக கவலைகள் ஏதுமற்ற அந்த பள்ளிக்கூட மாணவனாக,பால்யத்தோடு குளக்கரையிலும், களத்து மேட்டிலும்,காற்றில் பறக்கும் காகிதமாய் சுற்றி திரிந்ததை சுமந்து வரும் சில நேரங்களில் அப்பறவை..
.
பதின் பருவம் கொடுத்த படிப்பின் அடையாளத்தோடு அறிமுகமான கல்லூரியின் வாழ்க்கையினை,இல்லை இல்லை,
என் வாழ்க்கையின் அழகான உறவுகளும் அனுபவங்களும் நிறைந்து கிடந்த தருணங்களின் கவிதைகளை, மனதினுள் ஓடவிட்டு பந்தயம் வைத்து பார்க்கும் பல கணங்களில் அப்பறவை.
.
இன்னும் பல வேளைகளில், கடந்த ஆண்டில் இன்று கடந்த மாதத்தில் இன்று என, தேடி தேடி மகிழ்ந்திருந்த தருணங்களை திருப்பி திருப்பி காட்டி மறு காட்சி செய்து கட்டி போடுவதில் கெட்டிக்காரன் அப்பறவை.
.
வலியோ சுகமோ சுகமாகத்தான் வலிக்கின்றன, தவிர்க்க முடியாதென்பதால் தாங்கி கொண்டுதான் தொடர வேண்டும், அப்பறவையின் பயணங்களை, இன்னும் எத்தனை எத்தனை தொலைவு அழைத்து செல்லுமோ..? எவரை காண அழைத்துச் செல்லுமோ?
அன்போடும் அறிவோடும் அழகாக ரசித்திருப்போம், அசைபோட்டு சுவைப்போம்ஆசையோடு,
நம்முடைய நினைவுகள் என்றும் நமக்கானது மட்டுமல்லவா? என்றும் அதன் கதாநாயகர்கள் நாமல்லவா.!!!
.
சிறகுகள் விரியட்டும்
.
தொடர்வோம்...



Comments
Post a Comment