வாழ்கின்றேன் நானும்
ஏதோ ஒரு நாள் மீதமிருந்த பிஸ்கட் துண்டுகளை பகிர்ந்து அளித்தற்காக ஒவ்வொரு முறையும் வீதி வழியே வரும் போதெல்லாம் ஓடி வந்து
கொஞ்சும் தெரு நாய் குட்டியின் அன்பை பெறும் போதும்,
.
வயதின் மூப்பிலும்
இளமையின் துடிப்போடு
பூக்களை விற்கும் பாட்டியிடம் பத்து ரூபாய் குறைத்து
குடுத்து வாங்கிய போதும்,
மகராசனா இருக்கணும்பா என பூக்களின் மணமாய் வீசிய வார்த்தைகளின் அன்பை
உணரும் போதும்,
.
அலுத்து வெளுத்து
அவசரமாய் அலுவல்
முடித்து திரும்பும் நேரம்
தாமதம் ஆன போதும்
தவறாமல் பிடித்ததை
சமைத்து வைத்து காத்திருக்கும்
நண்பனின் அன்பை ருசிக்கும் போதும்,
.
கணம் தவறாமல்
கண்ணிமை போல்
தாய் செய்யும்
காதலிலும்,
சலிக்காமல் சண்டையிட்டு
மகிழ்வூட்டும் சகோதரியின்
பாசத்திலும்,
கவலைகளின் பாரம்
கனவிலும் தீண்டி விடாமல்
தோள் கொடுத்து
தேத்தி விடும் உறவுகளின்
அன்பில் திளைக்கும் போதும்,
.
தனிமையின் அமைதியில்
புத்தகங்களில் மூழ்கி எனை
தேடி திரியும் போதும்,
.
வியர்வையின் வாசம் வீச,
உடலெல்லாம் அயர்ந்து
போக செய்யும் உடற்பயிற்சியின்
வலிகளை விரும்பி
ரசிக்கும் போதும்,
.
பச்சிளம் குழந்தையாய்
எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி,
அறிந்தவர் அறியாதவர் என்ற
வேறுபாட்டுக்கு இடமின்றி,
சக மனிதனும் தன்னை
போலவே என
திகட்டாத தீராத
அன்பை எதார்த்தமாக
வழங்கும் மனிதர்களை
வழியெங்கும் காணும் போதும்,
.
இந்த உடலில் உயிரும்
உலகில் நானும்
வாழ்வதை உணர்கின்றேன்,
நவீன சாமானியன்...



Comments
Post a Comment