தீரா தேடல்
மழலைக் குழந்தையாய்
மடியில் மருவிக் கிடந்த போது
ஓயாத அழுகையின் மருந்தாய்
அவள் அன்பை கண்களில்
தேடிய போது பிறந்தானோ?
பால்யம் எட்டிப் பார்க்க
பள்ளிப் புத்தகங்களில்
புதைந்திருப்பதாய் சொன்ன
வாழ்வின் எதிர்காலத்தை
தேடிய போது பிறந்தானோ ?
பருவம் மீசையை அறிமுகப்படுத்த
உருவம் ஆடவன் என அடையாளப்படுத்த
கனவுகளோடு நுழைந்த கல்லூரிக்குள்
அறிமுகமான தோழிகளில் தேவதை யாரென
தேடி துடித்த போது பிறந்தானோ?
காதல் தோல்விகளுக்கும்
வாழ்வின் சவால்களுக்கும்
காலங்கள் புதிர் போட
அனுபவங்கள் விடை போட
சலித்து வெறுத்த தருணங்களில்
வெறுமையின் வெற்றிடத்தை
ரசித்து கடக்க காரணங்கள்
தேடி அலைந்த போது பிறந்தானோ ?
மனைவியென்றும் மகளென்றும்
உறவுகள் பொறுப்புகள் சேர,
தகப்பனென்றும் தாத்தாவென்றும்
இருக்கைகள் இடம் மாற,
எதிர்பார்ப்புகளும் எதார்த்தங்களும்
நினைவின் அடுக்குகளை நிறைக்க,
மனமோ இன்னும் இன்றும் தேடி கொண்டிருக்கின்றது?
வானம் பார்த்த உழவனாய்,
வறண்டு போன மனதின் வெடிப்புகளுக்குள்
பாய்ந்து விடாதா அமைதியின் வெள்ளம் என்று.
தேடலின் பிறப்பிடம் தேடுபவன்
எப்படி அறிவான்,
முகவரியின் முதல் வரி அழிந்த
கடிதத்தை பெறுபவன் போல ?
தீரா தேடலை, திகட்ட திகட்ட தேடி
தொலைந்த ஒருவன்..!



Comments
Post a Comment