பெரியார் 143
இந்திய அரசியல் அரங்கில் ஒரு சாமானியனை நோக்கி உச்சரிக்கப்பட்ட சொற்களிலேயே
அதிக பொருள் மிக்கதும் கல்வியைத் தருவதுமான சொல், பெரியார் முழங்கிய
‘சுயமரியாதை’.
“தலித் அல்லாத தலைவர்களில் பெரியார்தான் சாதி ஒழிப்பை வலுவாகப் பேசினார்.
பெண் விடுதலையை உயர்த்திப் பிடித்தார். மொழி, இன உரிமைகளையும் பேசினார்.
பெரியார் ஏன் கடவுள் மறுப்பை முன்வைத்தார் என்று நாம் ஆராய்ந்தால்,
அவருடைய அக்கறையையும் தொலைநோக்கையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
சாதியத்தை இங்கே கட்டிக்காப்பது மதமும் கடவுளும் என்று பெரியார் உணர்ந்தார்.
கடவுளுக்கு அஞ்சும் மக்கள் மதத்திற்குக் கட்டுப்படுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை எல்லாம் கடவுளாலும் மதத்தாலும் ‘முற்பிறவியின் பயன்’ என்று நியாயப்படுத்தப்படுகின்றன.
ஆகையால்தான், ‘மதமும் பிழை, கடவுளும் பொய்’ என்று சொல்ல வேண்டிய நிலைக்கு வந்தார் பெரியார்.
பெண்கள் துணையின்றி குடும்பத்தில் சீர்திருத்தம் சாத்தியம் இல்லை. ஆனால், குடும்ப அமைப்பானது பெண்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அவர்களுடைய சிந்தனையையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆகையால், பெண் விடுதலையைப் பேசுகிறார்.
இதனூடாகவே மொழிரீதியாக, இனரீதியாக நிகழ்கிற ஒடுக்குமுறைகளையும் எதிர்க்க வேண்டும் என்கிற நிலைக்கு அவர் வருகிறார்.
இன்று சாதிய அமைப்புகளை சுதந்திரமாக தூக்கி பிடித்துக் கொண்டு
அவரது சிலையை உடைக்கவும் அவமதிக்கவும் உரிமையை பெற்று கொடுத்ததற்கான
போராட்டம் பெரியாரின் சுயமரியாதையின் பலனாகவே பிறந்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
வெறும் கடவுள் மறுப்பாளராக ஒரு சில ஆதிக்க பின்னணியினரல் சாயமிட்டு காட்டப்படும்
பெரியாரையே பெரியார் என பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டு விமர்சிப்பது, வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
அவர்களெல்லாம் பெரியாரின் கருத்துக்களையும் அதன் உட்பொருளான சமூக நீதிக்கு எதிரான சாதி, மத, பாலின, மொழி வேறுபாடுகளையும் அடக்குமுறைகளையும் எவ்வாறு நாம் வாழும் சமுகம் கடந்து வந்ததென்றும், அதற்கு இந்த ஈரோட்டு கிழவன் எப்படி அன்றே( 1920) குரல் கொடுக்க துணிந்தான்? என விடை தேடி விட்டு தாராளமாக விமர்சியுங்கள், ஏன் எதிர்கருத்தும் கூட கூறுங்கள், அதற்க்கான உரிமையையும் உங்களுக்கு உண்டு என்றார் அவர்.
அதனால் தான் அவர் பெரியார்.
பகுத்தறிவும் சுயமரியாதையும் பெண்ணுரிமையும்
அனைத்து சமூகமும் பெறும் வரை தேவைப்படுவார்,
அது வரையிலும் தேடப்படுவார் பெரியார்.
#பெரியார்143
திரு சமஸ் அவர்களின் அரிசியல் பழகு நூலிலிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்ப்டையில்..



நன்று!
ReplyDelete