மழைப் பிரியம் அவள்
மழைக்காலத்தில்
ஒரு கோப்பை தேநீரை விட
இதமான சூட்டினை
உணர்ந்துதுண்டா?
அவளருகில் அதை
உணரமுடியும்,
காதலா நட்பா? என்ற
கேள்வியை சந்தேகத்தின்
மத்தியில் வைத்து விட்டு,
சாரலா மழையா?
என குழம்பிய கல்லூரி
காலநிலை அது!
சில நேரங்களில்
மழையும் சாரலாகும்,
நனைக்கும், சிணுங்கும்,
சிலிர்க்கும், ஏமாற்றும்,
ஏங்க செய்யும்
எதிர்பார்க்க வைக்கும்,
அவளை போலவே..
இத்தனை நாள் காணாத
மகிழ்ச்சியை என்னுள்
கொண்டு வந்தது,
மீண்டும் மீண்டும் தேட செய்தது,
என் தனிமையை நிரப்பிய
அவளின் அன்பின்
பெருமழையை,
தாய் மடி தேடும் கன்றாய்
தேடியது விரும்பியது
மனதும் அவளின் வருகையை
அவளுடன் இருக்கும் நேரத்தினை.
அதிகம் நனைந்தால் பிடிக்கும்
காய்ச்சலை எதிர்பார்த்தாலும்
அலட்டி கொள்ளாத மழைப் பிரியம்,
அவளின் மீதான பிரியம்,
அவளுக்கான பிரியமும்
பிடிவாதமாய் பிடித்துக்கொள்ள அடம்பிடிக்கும்
சிறு சிறு பிரிவிலும் கூட.
அதிகம் பேசினோம்,
வார்த்தைகள் தீர்ந்த போதெல்லாம்
சிணுங்கலிலும்
கெஞ்சலிலும் கொஞ்சலிலும்
வார்த்தைகள் செய்தோம்,
காரணமின்றி எதிர்பார்த்தோம்
சந்திப்பிற்காக காரணங்கள்
செய்தோம்,
மழை மேகம் தேடும்
மயில் போல
மாறிப்போன மனமும்,
மழைக்கால நீரோடையாய்
ஊடறுத்து ஓடிய உணர்வும்,
மனதை கட்டிப்போட்டு
வயதை காரணம் காட்டியது...
மழைக்காலத்தில் மட்டும் தானே
ரசித்திருக்க முடியும் மழையை?
அதற்காக ஆயுள் முழுவதும்
மழைக்காலத்தினை மட்டும்
அனுமதித்திடுமா இயற்கை?
காலநிலை மாற்றம் போல
தான் கடந்து போனது இவ்வுறவும்
கோடையாய் அறிமுகம் செய்தது
அவளின் பிரிவையும்...
இருவேறு திசைகளில் பயணித்த
மேகங்கள் ஒரே கடலை சேரும்
என்று எதிர்பார்க்கலாமே ஒழிய
உறுதி செய்ய முடியுமோ?
அவள் முன்னதாக
சேர்ந்து விட்டாள்
வாழ்க்கையின் கடலில் நதியாக,
நானோ தேங்கி நின்றேன்
கண்கள் குளமாக....
இப்போதெல்லாம் மழை வரும் போது,
வருத்தமும் கோபமும் துளியுமில்லை,
ஆச்சரியம் தான் அதிகமாக,
எப்படி இவ்வளவு நளினமாக
பொழின்றது இந்த மழைத்துளிகள்
மேகங்களால் கைவிடப்பட்ட போதும் என்று?
..
ஒவொரு முறையும் அது
அவளின் நினைவுகளை கிளப்பி விட்டு,
நனைக்கும், குளமாக்கும், பெருங்கடலென நிரப்பும் கண்களை
.
மீண்டும் மீண்டு விடுவேன்
அடுத்த காலநிலைக்குள் கண்கள் வற்றியதும்.!!


Comments
Post a Comment