கலாச்சாரத்தின் அடையாளமா அவள்?




பெண்களும் ஆடைகளும், பெண்களும் ஆபரணங்களும், 
என சம்பிரதாய சொல்லாடல்களுக்குள் அடக்கி வைத்து விடுகின்றோம் அவ்வளவு எளிதாக..

புடவை அணிந்து வா அனைவரும் இருப்பார்க்கள் என தொடங்கி, 
எதற்காக இவ்வளவு சிறிய ஆடை வேண்டாம் என்று, எளிமையான கேள்விகளோடு தான் 
நிகழ்த்தப்படுகிறது அத்தனை பெரிய வன்முறைகளும்,

சிறியதோ பெரியதோ புடவையோ குட்டை பாவாடையோ அவர்களின் 
தேவைகளை தாண்டி புரிந்து விடவா போகின்றது? புரிந்திருந்தால் 
அத்தகைய தீர்வுகளுக்கும் தேவை இருந்திடவா போகின்றது?

கருத்துக்களும் விமர்சனங்களும் வைத்து விவாதிப்பதற்கு பொது வெளியில் 
அவர்களே முன்வைக்காத போது,  முந்தி அடித்துக் கொண்டு முயற்சிப்பதில் 
அத்தனை ஆர்வம் நமக்குள் ஆணாக பிறந்து விட்டதால் என்னவோ?

இத்தனை பெரிய செலவுகளோடு இன்னும் வேண்டுமா, எதற்காக இந்த 
ஆபரணங்கள் மீதான மோகம் இன்னும்? என்ற சிந்தனையின் கேள்விகளை 
தள்ளி வைத்து விட்டு,

பெண்களால் /பெண் பிள்ளைகளால் இந்த சுமையையும் ஏற்க வேண்டுமே என்ற 
வெறுமையின் விளிம்பில் தான் இன்னும் நின்று கொண்டிருக்கின்றோம்,

“அணிந்து களித்திருந்ததை விட, மகளுக்காக்க மகனுக்காக என்று 
காத்திருந்ததே அதிகம் அந்த நகைகள்” என அவளே சொல்லும் போதும் 
கூட.

“கொள்ளி வைக்க பிள்ளை வேண்டுமாம், பெண் கொள்ளி வைத்தால் 
எரியாதா அந்த சிதை? “

அது என்னவோ பெண்களின் பிறப்பை காட்டிலும், ஆண்களின் பிறப்பை 
புனிதப்படுத்தி விடுகின்றது இந்த சமூகம். அது பின்பற்றும் பண்பாட்டு,
கலாச்சார வழிமுறைகள் வழியே.

இங்கு பெரும்பாலும் கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்களும், 
பெண்களை மையப்படுத்திய ஆண்களின் விருப்பத்திற்கு உட்பட்ட 
அதிகாரத்தின் விழுமியங்களோடு தான் கட்டமைக்கப்படுகின்றன.

கற்பு தொடங்கி காதல் முதல் திருமணம் வரை பெண்கள் மட்டும் தான் 
சுமந்து நிற்க வேண்டியது அதன் அடையாளங்களையும் அவலங்களையும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலக்கியங்களிலும் சரி, காவியங்களிலும் சரி, 
சினிமாவின் கதாபாத்திரங்களிலும் சரி பெண்களின் உளவியலையும், 
உரிமைகளையும், உணர்வுகளையும், இங்கு ஆண்களே எழுதுகின்றனர் 
அல்லது படைக்கின்றனர்.

அதற்கான சுதந்திரம் கூட வழங்காத சமூகத்தில் பெண்ணியம் பற்றியும் 
பெண்ணுரிமை பற்றியும் பெருமைபட பேசுவது ஒரு மேடைப் பேச்சின் 
தலைப்பாகவே இருக்கின்றது, அதிலும்கூட அவளுக்கு இடம் இருக்கிறதா 
என்பது சந்தேகமே?

ஏனென்றால் இங்கே சிங்கபெண்ணே என்று ஆண்கள் பாடினால் தான் 
பெண்கள் முயற்சி செய்வார்கள் என்று கட்டமைக்கப்படுகிறது இன்றும்கூட.
அதற்காக குறைகள் கூறுவதாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். 
எனது நோக்கமும் அதுவல்ல.

இங்கு அவர்களை அவர்களாகவே வாழ அனுமதிப்பதே உண்மையான 
சுதந்திரம் என்றே நான் எண்ணுகிறேன்.

எந்த ஆடை அணிய வேண்டும்? எங்கு படிக்க வேண்டும்? என்ன படிக்க 
வேண்டும்? என்ன வேலை செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? 
எப்படி வாழ வேண்டும்? எவருடன் இருக்க வேண்டும்? என முடிவெடுக்கும் 
உரிமை அவர்கள் இடத்து வழங்கப்படவேண்டும்.


மேலும் இங்கு கலாச்சாரம் என்பது பழமைவாதத்தோடு ஒத்து வாழ்வது அல்ல.
அது ஒன்றாக வாழும் மக்களின் உண்மைகளை எதார்த்தங்களை பிரதிபலிக்கிறது. 
எனவே கலாச்சாரம் அதுவாக மாறாது. அதை மாற்ற விரும்புகிறோம். 
அமைப்பு மாற்றப்படும்போது கலாச்சாரமும் மாறுதலுக்கு உட்படும்.
அதில் அவள் மட்டும் விதிவிலக்கல்ல அவனும் தான்.
இங்கு அவள்கள் மட்டுமே கலாச்சாரத்தின் அடையாளமாக வைக்கப்படும் கற்பிதம், 
தகர்க்கப்பட வேண்டிய பொறுப்பு இந்த நூற்றாண்டின் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கல்வியும், 
அனுபவமும், திறமையுமே தீர்மானிக்கின்றது யார் 
வலிமையானவர் மற்றொருவரை விட.

பிறப்பும், பாலின வேறுபாடும் அல்ல. 
வாய்ப்பும், உரிமையும், சுதந்திரமும் 
அவர்களிடத்து வழங்கப்பட்டால்,


அப் பறவைகளும்

இனி சிறகுகள் விரிக்கும்!

கடல்கள் தாண்டும்!

வானம் தீண்டும்!

Comments

Popular Posts