அன்பின் வேரில் மரியாதையின் ஈரம்
அன்பின் வேரில் மரியாதையின் ஈரம் படிந்திருக்கும் வரையில் தான் உறவெனும் மலர்கள் மணம் வீசும்..
அன்பின் பெயரால் ஆளுமை செய்யும் மனித மனம் ஏனோ மரியாதையின் அதிகாரத்தை வழங்க மறுக்கின்றது பெரும்பாலும் தன் பிரியமானவர்களிடம்.
இவள் எனக்கு இவ்வளவு அன்பானவள், இவன் எனக்கு இவ்வளவு அன்பானவன், என காதலில் விரியும் ஆச்சர்யங்கள், இவன்/இவள் தனக்கு எவ்வளவு மரியாதை உடையவள் என்ற கேள்விக்கு இவன்/இவள் தனக்காக எதையும் செய்வான் என்ற ஆறுதல் பதிலையே அளிக்க முயற்சிக்கின்றது. அவளின் /அவனின் குறைந்தபட்ச ஆசைகளுக்கு செவிமடுக்காத உறவின் அடக்குமுறைகளால், அறிமுகம் இல்லாதவரிடம் ஆறுதல் தேட வைக்கும் இந்த வகை அன்பில் மரியாதையின் மாண்பை எங்கே காண்பது? அன்பையும் அதன் விளைவுகளையும் அலங்காரப்படுத்தும் சமூகம் அதன் மீதான மரியாதையை வழங்குவதை அலட்சியப்படுத்த தயங்குவதே இல்லை.
தன் துணையின் கனவுகளுக்கும், இலக்குகளுக்கும் அங்கீகாரம் வழங்க முற்படாமல் அன்றாடங்களுக்குள் அவர்களை பழக்கப்படுத்தி தன் இசைவுகளுக்குள் வாழ வைத்ததில் அன்பின் உதவி ஆழமானது.
இங்கு பெரும்பாலான உறவுகள், காதலிலும் சரி, திருமண வாழ்விலும் சரி, அவர்கள் முதலில் காதல் செய்ததற்கான காரணம், வாழ்வின் முழுமைக்கும் தொடர்கிறதா என்ற சந்தேகமும், அதற்கான பதில்களாக அவர்களின் மரியாதையில் ஏற்பட்ட மாற்றமே வரக் கூடும். திருமணம் ஆன பல ஆண்டுகளுக்கும் பிறகும் கூட விவாகரத்து வேண்டும் உறவுகளில், காதல் மட்டும் இல்லாமல் போனதுதான் காரணமாக இருக்குமா என்ன? என்னால் இனியும் தாங்கி கொள்ள முடியவில்லை என நீளும் உள்ள குமுறல்களின் வலிகள் எல்லாம் உணரப்படாமல் புறக்கணிக்கபட்டதின் முடிவாகத்தானே அது இருந்திட முடியும்.
இங்கு குறைந்த பட்ச மரியாதையாவது வழங்கப்பட்டிருப்பின், அவள் கொண்ட காதலாவது உயிரோட்டம் பெற்றிருக்கும். மரியாதை இன்றி செய்யும் அன்பினால், அவர்கள் உங்களுக்கு சேவை செய்ய முடியுமே ஒழிய, காதல் செய்ய முடியுமா என்பதே இப்பதிவின் கேள்வி?
அன்பில் திளைத்து அறத்தில் தவறாது வாழும் உறவே இடற்பாடின்றி இளைப்பாருதல் தரும், இயலாமல் போகும் காலம் வரைக்கும்..
தொடர்வோம்..



Comments
Post a Comment