செல்லாத பணமும், திருமணமும்

 

நம்முடைய திருமணங்கள் எதனால் நிச்சயிக்கப்படுகிறது.. சாதியால் நிச்சயிக்கப்படுகிறது..  மதத்தால் நிச்சயிக்கப்படுகிறது.. உங்களுடைய படிப்பால் நிச்சயிக்கப்படுகிறது.. உங்களுடைய பணத்தால் நிச்சயிக்கப்படுகிறது..நீங்க பார்க்கக்கூடிய ஜோசியத்தால் நிச்சயிக்கப்படுகிறது..நீங்க கொடுக்கக்கூடிய வரதட்சணையால் நிச்சயிக்கப்படுகிறது.. உங்களுடைய உடல் நிறத்தால் நிச்சயிக்கப்படுகிறது..இப்படியானநிச்சயங்களால் நிச்சயிக்கப்படுகிற ஒரு திருமணம் உண்மையில் நல்ல திருமணமா?

இல்லை சுய விருப்பத்தின் பேரால் காதலித்து செய்துகொள்ளும் திருமணம் நல்ல திருமணமா?

இமயத்தின் செல்லாத பணம் நாவலில் இருந்து..


செல்லாத பணத்தின் மையக் கருத்தாய் இமயம் வைக்கும் தர்க்கம் மனதில் பெரும்பாலான நேரங்களில்  திருமணம் பற்றியும், காதல் திருமணங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், அதனோடு எழும் சஞ்சலங்களின் சபலத்திற்கான தீர்வை நோக்கி  நம் சமூகம் பயணிக்க வேண்டிய அவசியம் பற்றி சிந்திக்க வைக்கிறது. 

திருமணம் என்னும் பேரில் இரு மனங்களை இணைக்கும் நிகழ்விற்க்கு சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும்  கட்டுப்பாடுகள், இன்னும் இத்தனை அவசியம் தானா? இரு  மனங்கள் காதல் கொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்து, நீண்ட காலமான தங்களின் பயணத்தின் வழியே நன்கு பரிட்சயம்  ஆன பின்பும், இவள்/ இவன் தனது துணையாக இருக்க சில காரணங்களை அறிந்து மனதளவில் ஒத்திசைந்து ஏற்று கொண்ட  பிறகும் கூட, இந்த சமூகம் வரையறை செய்து வைத்திருக்கும் சில வரைமுறைகளுக்குள் அவர்களின் அடையாளங்கள் இருக்க பெறாத வேளையில் இணைந்து வாழ எண்ணிய அவ்வுணர்வை மறுதலித்து கொள்ளத்தான் வேண்டுமா என்ன? 

இதில் இன்னும் புரிந்து கொள்ள முடியாத காரணங்களாக பிறப்பால் பெற்ற, தன்னளவில் முயன்று மாற்றி கொள்ள முடியாத சாதி, சமூகம், பெற்றோர் இயல்பு என அவர்களின்  புற சூழ்நிலையை காரணம் சொல்லி அவர்களுக்கு இடையே உள்ள மகிழ்ச்சியையும் புரிதலையும் பொருட்படுத்தாமல், எதனை சாதிக்க, யாரை அங்கீகரிக்க இத்தனை கட்டுப்பாடுகளை, கற்பனை அடையாளங்களை தூக்கி கொண்டு நிற்க போகிறோம், நிறுத்திக் கொண்டே இருக்க போகின்றோம் அவர்கள் இணைவதை?  

சரி காதலை தான் அங்கீகரிக்க தயாராக இல்லாத உங்கள் நம்பிக்கை,  உங்களின் சாதி, மதம், ராசி, சோதிடம், சமுகம், அந்தஸ்து, போன்ற கட்டுப்பாடுகளின் வரையறைக்குள் பொருந்தி போகும் தம்பதிகளை மணமுடித்து வைத்து, உண்மையிலே மகிழ்ச்சியான தம்பதிகள் ஆக அவர்கள் வாழ்வார்கள் என நினைக்க மட்டும்  உங்கள் நம்பிக்கை  எங்கிருந்து பிறந்ததோ? 

இன்னும் வேடிக்கை என்னவென்றால், இந்த நிச்சய திருமணங்களை ஒட்டி அரங்கேறும் சம்பிரதாயங்கள் பெண்ணை பெற்றவரை ஏனோ அடிமையாகவே,  தன் பெண்ணின் வாழ்வை காக்க போகும் கருணையாளன் ஆகவே ஆணை பாவிக்கும் மனநிலையை வலிந்தும் சுமக்கத் தான் வேண்டுமா என்ன?

பெண்ணை பெற்றாலே பொருட்சுமை என இருக்கும் நிலையில் இனி அவன் தான் எல்லாமே என ஒப்படைக்கும் முறைமை, அடிமை சந்தையின்  நவீன வடிமாக தெரியவில்லையா உங்கள் கண்களுக்கு?

காதலித்து திருமணம் செய்து கொண்டால் பேசும் சமூகம், பெண்ணை பெற்றவர்களின் வாழ்க்கை இறுதியில் கடினமாய், தனிமையாய் தான் இருக்க வேண்டும் என்பதை மட்டும் எப்போது, ஏன் ஏற்று கொண்டது? இன்னும் ஆணை பெற்றால் ஏதோ சாதனையாகவும், பெண்ணை பெற்றால் சோதனை யாகவும் மன நிலைக்கான அவலங்களை அறியவும், அதை களையவும் வாய் திறக்காத இந்த சமூகம், இருவர் இணைந்து வாழ்வது பொறுக்காமல் வாய் திறக்கும் என்றால், வேண்டுமா என்ன அச்சமுகத்தின் அங்கீகாரமும் ஆசீர்வாதமும்?

இவ்வளவு அங்கலாய்ப்பு வேண்டாமே, இத்தகைய நடைமுறைகள் அனைத்தும் அவர்கள் மகிழ்வாக வாழ்வதற்கே என பொருமி கொள்ளும் இதயங்களே,  சம்பிரதாயங்கள் அனைத்தும் அவர்களின் மகிழ்ச்சிகாக தான் என்பதை ஏற்று கொள்ள முயன்றாலும், இயலாத குடும்பங்களில் அதை வலுக்கட்டாயமாக  வாங்கி கொடுத்து தான் மகிழ்விக்க வேண்டுமா என்ன? அவர்களுக்காக என்று இவர்களை (பெற்றோர்களை) இம்சிக்கிறோம் என்பதை எப்போது உணரப் போகிறோம் ?  

இங்கு நிச்சய திருமணங்கள் தவறு என பதிவிட விரும்பவில்லை, அதன் வரையறைகளும், வரைமுறைகளும் மாறுதல் பெற்று மறு பரிசீலனை செய்யப்பட வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும், சம்பிராயதங்கள், பழக்கங்கள் தாண்டி இங்கு ஒருவரை ஒருவர் வாழ்க்கை துணை என தேர்ந்தெடுக்க வாய்ப்பும், உரிமையும், அதற்கான முழு சுதந்திரமுன் அவர்களிடம் வழங்கப்பட வேண்டும். 

நம் சமூகம் என்ன சொல்லும், சொந்தம் என்ன சொல்லும், என்ற சிந்தனையின் விளிம்பில் நின்று யோசிக்காமல், நம் மகள்/ மகன் வாழ்க்கையின் விருப்பம், தன் துணையின் மீதான குறைந்த பட்ச எதிர்பார்ப்புகள், ஆசைகள், கனவுகள்  குறித்தும் செவி சாய்க்க முயலுங்கள், நீங்கள் கட்டமைத்துள்ள, வாழ்ந்த சமூகத்திற்காக இல்லை திருமணங்கள், அவர்கள் இணைத்து உருவாக்கட்டுமே மாற்றகளுடன் கூடிய நல்லதொரு சமூகத்தை...








Comments

Popular Posts