எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும்



உள்ளங்கையில் ஏதுமற்ற போதும் அள்ளி தர அன்பையும் ஆறுதலான வார்த்தைகளையும் வழங்க முடியும் எனில் சக மனிதனிடம் அதை  வழங்க அவகாசம் இல்லாமல் போகும் அளவிற்கு வாழ்க்கை கடினம் ஆகிப்போனதில் ஆச்சர்யம் அதிகமில்லை, இந்த அவசரமாகிப் போன வாழ்க்கையின் முறையில்.  "இனிய உளவாக இன்னாத கூறல்", காலாவதி ஆகி போனதோ இருபத்தோராம்  நூற்றாண்டில், இல்லை கனியை உண்ணும் அளவிற்கு பொறுமை இல்லாமல் போய்விட்டதோ வாழ்க்கை?

இல்லாததை ஒப்பிட்டு, மனதின் அமைதியின் குளத்திற்குள் கல்லென வீசும் வார்த்தைகள் ஏற்படுத்தும் துயரத்தின் அலைகளுக்கு நடுவே பயணப்பட துடிக்கும் வன்மத்தின்  மனிதம் எங்கே போக இத்தனை பிரயத்தனம் செய்கின்றது? துயரத்தின் அலைகளோடு போராடி ஓய்ந்து போன அந்த மனதிற்கு அமைதியின் குளம் கண்களில் பொங்கி நிற்கும் போதும் காணாமல்.

அன்பாய் இருந்திடத்தான் அத்தனை சிரமமா என்ன?   என்றோ ஒரு நாள் மீதமிருந்த உணவை வழங்கியதற்காக, அத்தனை பிரியமுடன் நாள்தோறும் நான் கதவை திறக்கும் போதெல்லாம் வாலை குழைத்து பார்க்கும் நாய்க்குட்டியின் அறிவை விட மேம்பட்டவன் என நான் சொல்லிக் கொள்ளும் என் அறிவிற்கும் அது அத்தனை சிரமமா?

கோபம், காழ்ப்புணர்ச்சி, கௌரவம், ஏளனம் இறுமாப்பு, செருக்கு, வெறுப்பு, ஆசை, எதிர்பார்ப்பு என பல உணர்வுகள் பெற்றுக் கொடுக்கும் அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் அன்பு பெற்று தருவதில்லையோ? ஒருவனை மட்டுப்படுத்தி தன்னை உயர்ந்தவனாய் உயர்த்துவதற்கு இவை உதவுவதால் இருக்குமோ? ஒருவனுக்கு நீ உயர்ந்தவனெனில் உனக்கு ஒருவன் உயர்ந்தவனாக இருப்பான் என உணராத உணர்வுகளால் உயர்ந்தவனாய் தன்னை நினைப்பதன் பொருள் தான் என்னவோ?

பண்பட்ட நிலத்தில் புதரும் வளரும் பூக்களும் வளரும், பூக்களை வளர்க்க மெனக்கடாதவரை, புதர்களுக்குள் வசந்தம்  தேடும் கதையாகத்தான், அன்பின்றி அறமின்றி வாழும் வாழ்க்கையின் தேடலும் இருந்திட முடியும்

தவறுகளை ஏற்றுக் கொள்வதும்,விட்டுக் கொடுப்பதும்,மன்னிப்பு கேட்பதும் பலவீனத்தின் அடையாளமா என்ன? அன்பை முன்னிலைப்படுத்தாத எதுவும் பலவீனம் தான். 
அடையாளம் துறந்து, அங்கீகாரம் இழந்து, அதிகாரம் மறந்து அன்பினால் பெறும் சுயமே  தன்னைப் போல பிறரை நேசிக்க  முடியும் என்று நம்புகின்றேன்.

ஏதுமற்ற வானில்  சிறகுகள் அசைத்து பறக்கும் ஒற்றைப் பறவையின் இயக்கமாய்,  வழிப்போக்கனின் வாழ்விலே இளைப்பாறுதல் தரும் மரங்களாய்,
மலர்ந்து மணம் வீசி மடியும் பூவை போல, 
அன்பு செய்தே வாழ்வதே இப்பிறவியின் பயனாகும்.



"எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை"
என்ற குறளின் உந்துதலோடு.

(பொருள்: மனத்தானும் பிற உயிர்க்குத் துன்பஞ் செய்யாமை தலையாய துறவறம்)





Comments

  1. what all u say s true.but இதை எல்லாம் சொன்னா இன்று பிழைக்க தெரியாதவன் nnu சொல்லுவாங்க.so நாமும் mob psychology ஐ follow பண்ணுவது தான் நமக்கு இருக்கும் ஒரே வழி

    ReplyDelete

Post a Comment

Popular Posts