ஏன் வாசிக்க வேண்டும்?


எதற்காக வாசிக்கின்றாய்? ஏன் வாசிக்க வேண்டும்? உனக்கு வேறு வேலையே இல்லையா? பாட புத்தகங்களை படித்ததே போதாதா? அப்படி வாசித்து என்ன சாதித்து விடப் போகிறாய்? 

என பல கேள்விகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு என்னுடைய வாசிப்பு அனுபவம் பெறவில்ல. ஆனாலும் என்னுள் இருந்த ஒரு உள்ளுணர்வு சில காரணங்களை எனக்குள் ஏற்படுத்தி இருந்தது,  அதுவே வாசிப்பை நோக்கி என்னை நகர்த்தியது. 

இன்று வாசிப்பது எப்படி என்ற செல்வேந்திரன் எழுதிய புத்தகத்தை வாசித்த போது அதில் மேலே சொன்ன கேள்விகளுக்கான பதில்களை அவர் உணர்த்தி சொன்ன விதம், அனைவருக்கும் உதவும் என விரும்பியே  இப்பதிவு.

நீங்கள் உடனே அகற்ற விரும்பும் சமூக இழிவு எது என்று கேட்டால், தீண்டாமை, மூடநம்பிக்கை, மதவெறி, இனவெறி, ஊழல், பெண்ணடிமை, பாலியல் கொடுமை, சினிமா மோகம், போதைப் பழக்கம், குடும்ப வன்முறை, குழந்தைத் தொழிலாளர், மோசமான நிர்வாகம், இயற்கை வளங்களைச் சூறையாடுதல் என அவரவர் கருத்திற்கேற்ப ஒன்றைச் சொல்லுவோம். 

ஆனால், இத்தனை இழிவுக்கும் மேல் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இழிவு என்பது அறிவுக்குறைபாடு. 

வாசிக்காதிருப்பது எனும் மாபெரும் சமூக இழிவு பெற்றுப்போட்ட சிறு சிறு குழந்தைகள்தான் மற்றவைகள். யோசித்துப் பாருங்கள். 

பெரியாரையும் அம்பேத்காரையும் காந்தியையும் வாசித்த ஒருவன் முதன்மையாகத் துறப்பது சாதிய அடையாளத்தைத்தான்.

ஒரேயொரு சூழியல் நூலை வாசித்துவிட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீசமாட்டான். 

பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒருபோதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக்கொள்ளமாட்டான். 

சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்களின் மீது ‘ஜூலி ஐ லவ்யூ’ எனக் கிறுக்க மாட்டான். 

இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்குப் பால் அபிஷேகம் செய்ய முடியாது. 

நமது அறிதல் முறைகளை, தத்துவங்களை வாசித்துவிட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்டமாட்டான். 

அரசியல் நூல்களை வாசித்த ஒருவன் இந்த ஜனநாயகத்திற்கு தேசம் கொடுத்திருக்கிற விலை என்ன என்பதறிவான். 

இந்தக் கட்டுமானம் சிதைக்கப்படாமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வான். 


இன்னும் தெளிவான சாட்டை அடியாக..


கல்லூரி மாண்வர்களிடம் உரையாடும்போது,

 “சார் நான் வாசிக்கறதில்ல… ஆனால் நல்லாத்தானே இருக்கிறேன். வேளாவேளைக்கு சாப்பாடு கிடைக்குது. நல்ல டிரெஸ் இருக்குது. பைக் இருக்குது. போன் இருக்குது. காலேஜூக்கு வாரேன். நண்பர்களோட ஜாலியா இருக்கிறேன். பப்ஜி விளையாடறேன். டிக்டாக் பண்றேன். நான் சந்தோசமாகத்தானே இருக்கிறேன்… இதில் உங்களுக்கென்ன பிரச்சனை…”

 இப்படி சொல்பவர்கள் பெரும்பாலும் ‘சிங்கிள் சைல்டு’ எனும் ஒற்றைக் குழந்தையாக இருப்பார்கள். இருபது வயது வரை சோறு போட்டு காப்பாற்றிய என் பெற்றோர் 40 வயது வரை காப்பாற்ற மாட்டார்களா. அவர்கள் காலத்திற்குப் பிறகு அவர்கள் சேர்த்து வைத்த சொத்து – குறைந்தபட்சம் ஒரு வீடு என்றாலும் – அதை விற்று 60 வயது வரை ஆனந்தமாக வாழலாமே? வாழ்க்கை வாழ்வதற்கே சார். தேவையில்லாமல் அலட்டிக்கொள்ளக் கூடாது என்றும் என்னிடம் வாதிட்டவர்கள் உண்டு. சரிதான். நியாயமான வாதம்தான். 

ஆனால் நண்பர்களே, அறுபதாண்டுகள் கூமூட்டையாகவே வாழ்வது எவ்வளவு சிரமம் தெரியுமா? எத்தனை சபைகளில் தலையைக் கவிழ்ந்தபடி எங்கே என்னிடம் கேட்டுவிடுவானோ என உள்ளுக்குள் அஞ்சியபடி ஒடுங்கி வாழவேண்டும்? எங்கும் எதிலும் ஒரு பொருட்படுத்தப்படாத மனிதனாகவே வாழ்ந்து மடிவது எவ்வளவு பெரிய சாபம்? பெற்றோர் காப்பாற்றிக் கொடுத்த சொத்துக்களை கேனத்தனமாக இழந்தவர்கள் எத்தனை பேர்? ஒரு கேனையனை ஏமாற்றுவது எத்தனை எளிது தெரியுமா? இப்போதே நீ எத்தனை விஷயங்களில் ஏமாந்துகொண்டிருக்கிறாய் தெரியுமா? 

நீ அணிந்திருக்கும் சட்டை ஏன் இரண்டாயிரம் ரூபாய் என என்றாவது யோசித்திருக்கிறாயா? நீ கட்டிய பணத்திற்குண்டான தரம் மிக்க உணவுதான் ஹாஸ்டலில் கிடைக்கிறதா? கையில் வைத்திருக்கும் செல்போன் – 500 கிராம்கூட எடையில்லாதது – எதற்கு லட்சம் ரூபாய்? உன்னுடைய பொருளாதார முடிவுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு உட்பட்டதுதானா? நீ ஓட்டும் பைக்கில் இனப்பெருமை பேசும் ஸ்டிக்கர் ஒட்டிவைத்திருக்கிறாயே, எவ்வளவு பெரிய கீழ்மை தெரியுமா? 

ட்வீட்டரில் ரசிகச் சண்டை போடுகிறாயே, எவ்வளவு கேவலமெனப் புரியுமா? உன்னை நண்பா, நண்பி, ரத்தமே, ஒறவே என விளிக்கும் உன் கதாநாயகன் உன்னை தன் பிறந்தநாளையொட்டி நற்பணிகள் செய்யச் சொல்வான், ரத்ததானம் செய்யுங்கள் என்பான், தேர்தலில் மறக்காமல் ஓட்டுப் போடுங்கள் என்பான். மறந்தும் கூட உன்னை புத்தகம் வாசி என சொல்லமாட்டான். பேப்பர் வாசிக்கிறாயா என்று கேட்கமாட்டான். தன் வாழ்நாளில் ஒரு மேடையில் கூட ஒரு புத்தகத்தின் பெயரையோ எழுத்தாளனின் பெயரையோ அல்லது ஒரு அசல் கலைஞனின் பெயரையோ உச்சரிக்கவே மாட்டான். ஏன் என யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் எதையேனும் தேடி வாசித்தால் முதலில் உடைத்து வீசுவது அவர்களைத்தான். 

ஒரேயொரு நூலை வாசித்தபின் நீங்கள் ரசிகக் கும்பலில் ஒருவர் அல்ல. ஒரு நூலைத் தொட்ட மறுகணமே உங்கள் ரசனையின் எல்லைகள் விரிவடைகின்றன. எவ்வளவு மலினமான பண்டம் உங்களிடம் திணிக்கப்படுகிறது என்பதை உணர்வீர்கள். உங்கள் பணத்தில், உங்கள் நேரத்தில், உங்கள் உழைப்பில் தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு தங்கள் வாழ்வைச் செழிப்பாக்கிக்கொள்கிறார்கள்.

பிறகு நீங்களே அவர்களுக்கு வாக்களித்து உங்களை ஆளும் பொறுப்பையும் ஒப்படைக்கத் தயாராகிறீர்கள். இதன் பொருள் கேளிக்கையே வேண்டாம் என்பதல்ல. எந்தச் சமூகத்திற்கும் கேளிக்கை அவசியம். ஆனால், கேளிக்கைக்கும் மலினத்திற்கும் உண்டான வித்தியாசத்தை அறிந்துகொள்ள வேண்டும். இங்கு கேளிக்கை என்ற பெயரில் மலினங்கள்தான் உங்கள் முன் கடைவிரிக்கப்படுகின்றன. 

ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய முதன்மையான பதில்: “கூமூட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்துதான் ஆகவேண்டும் ராஜா!”

~செல்வேந்திரன்

வாசிப்பது எப்படி?: vasippathu eppadi? (Tamil Edition) https://www.amazon.in/dp/B086HPBW13/ref=cm_sw_r_apan_Q2AKK0VRDYN0PDFTSTA4




Comments

Popular Posts