நவீன நாகரிக சாமானியன்
பதின்பருவம் அறிமுகம் செய்யும் இளமையின் துடிப்புகளை அலைபேசி எனும் கூண்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு வானம் தேடும் மனதோடு, முப்பொழுதும் தொடர்பில் வைத்திருக்கும் முயலும் சமூக வலைதள செயலிகளை ரேகைகள் தேய தேய்த்துவிட்டு தனியாய் தான் நீ இருக்கிறாய் இத்தனை இருந்தும் என்ற மன உளைச்சலின் நிலைமைக்கு 30 வினாடி பதிவுகளில் ஆறுதல் தேடி என் காலம் கரைந்து போகும் மாயம் அறியா நான்.
அரைகுறை வசனங்களோடு, ஆபாசங்களை ரசிக்கும் படி அவிழ்த்து விடும் ஆடல்களோடு, சுயசிந்தனை சிறிதும் இன்றி இயலாமையை, உடலமைப்பை சுட்டிக்காட்டி ஏளனம் செய்யும் அற்ப நிகழ்வை நகைச்சுவை என, சிரம் மேற்கொண்டு போராட்டங்கள் பல கண்டு பெற்ற சமூக மாற்றங்களை பின்னோக்கி இழுக்கும் படைப்புகள் எனும் பேரில் பொழுதுகளை களவாடும் பதர்களை பொழுதுபோக்கென ஏற்றுக் கொண்ட நான்,
சாலை வழியாய் பயணிக்கும் போது தாங்கொனாத துர்நாற்றம் கலந்த காற்றை சுவாசிக்க நேரும் போது பிறக்கும் சூழியல் பற்றிய அனுதாப சிந்தனையுடன் , என் வீட்டில் சேரும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை எது என பிரித்து போட மறந்தது பற்றியோ, என் நகரில் நாள்தோறும் நான் போடும் சராசரி தனிமனித குப்பை 680 கிராம் ஆனது பற்றியோ, அதற்காக நான் சலித்து கொள்ளாமல் தினந்தோறும் வாங்கும் மளிகையை பாலிதீன் பைகளில் கூச்சம் இன்றி வாங்குவது பற்றியோ சலனம் கொள்ளாத நான்,
அரசியல் சினிமா விளையாட்டு பற்றிய சேதிகளை காரசாரமாக பேசிக் கொள்வதில் பெருமை தேடிக் கொண்டு, சமூகத்தின் சீர்கேட்டிற்க்கு அரசியலின் அவலட்சணமும், நிர்வாகத்தின் கையாலாகாததனமும், கொள்கையில, அமைப்பில் மாறுதல் வேண்டும் என்றும் பேசி என் ஆதங்கத்தையும், அங்கலாயிப்பையும் அக்கறையையும் காட்டிக்கொண்டு, என்னால், என் அறிவால், என் நேரத்தால், என் செயலால் என்னளவில் முடியும் ஒரு மாற்றத்தை செய்ய முன் வராத நான்,
எதிர்பார்ப்பும், தேவையும், நன்றியும் சார்ந்து இயங்கும் சக மனிதனின் மீதான பிரியம், அன்பின் நிலையை அறியாதது பற்றியோ, அன்பு செய்து வாழ்வதே நமக்கிங்கு தொழில் என உரைத்ததன் பொருள் பற்றியோ, உள்ளங்கையில் ஏதுமற்ற போதும் அள்ளி தர அன்பையும் ஆறுதலான வார்த்தைகளையும் வழங்க முடியும் என்ற போதும் சக மனிதனிடம் அதை வழங்க அவகாசம் இல்லாமல் போகும் அளவிற்கு வாழ்க்கை கடினம் ஆகிப்போனது பற்றியோ ஆச்சர்யம் கொள்ளாத நான்,
சுயநலமோடு, அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் தேடி இழுத்து செல்லும் வாழ்கையில், நானே இல்லாத நானாய் என்னை மாற்றும் வளர்ச்சிக்கு, என் அடையாளத்தை அடகு வைத்துவிட்டு மீட்டெடுக்க முடியாமல், மனதினுள் தேம்பும் வெற்றிடத்திற்கு நிம்மதியை இட்டு நிரப்ப வழிமுறைகள் தேடி அலையும் நான்..
நவீன நாகரிக சாமானியன்.
Always inspired from: An Invitation for Action



Comments
Post a Comment