அன்புள்ள தோழிக்கு
அகடினமான நாட்கள் வானிலையிலும் உண்டு என்ற போது வாழ்க்கையிலும் வரும் என்பதில் ஆச்சரியம் அதிகமில்லை. அத்தகைய கடினமான காலங்களை கடந்து வர, மகிழ்ச்சியாக இருந்த காலங்களின் நினைவுகளும், வரும் காலம் வசந்தமாக அமையும் என்ற நம்பிக்கையும் தான் காரணமாக இருந்திட முடியும். இருவரின் மனதாலும், செயலாலும் உருவாகும் உறவில் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு, வருத்தம், துக்கம், துள்ளல் ஏமாற்றம், எதிர்பார்ப்பு என உணர்வுகளின் அத்தனையும் வரும், இது என்னால், உன்னால் என்று இன்றி, இருவரின் பேரால் நிகழ்ந்தது, இருவராகத்தான் அதை ஏற்றுக்கொண்டு, விட்டுப்கொடுத்து, முடிந்தால் மன்னிப்பு, இல்லையென்றாலும் கடந்து வந்தால் சரி ஆகிவிடும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கை, இவையன்றி நகரும் உறவுகள் நாம் வாழும் சமூகத்தில் பிழைத்திருக்குமே தவிரே வாழ்ந்திட முடியாது. நிகழ்வுகளின் வருந்தங்களுக்கு அளவுகோல்கள் வைத்துக்கொண்டு விவாதங்கள் செய்வதில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கையை விட, வருத்தம் என்றால் வருத்தம் தான் அதில் உன்னுடையது பெரியது என்னுடையது பெரியது என்பதில் அர்த்தம் ஏதுமில்லை, கடந்து வரும் காலங்களில் அதற்கான முடிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அர்த்தம் உள்ளதாகும். எதையும் உடனே இழக்க கோபத்தின் நியாயங்கள் போதும், ஆனால் விடாமல் பிடித்துக் கொள்ள தான் அன்பின் மெனக்கெடல்கள் வேண்டும், இங்கு என் மீதான தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க, என் அன்பு ஒரு போதும் தயங்கியதில்லை, ஆனால் ஏற்றுக்கொண்டு கடந்து வர விரும்பாத உந்தன் மனதிடம் நம்பிக்கையின் சுவடே தெரியாமல் இருப்பது தான் வருத்தம். உன் தவறுகளை விட உன் அன்பை அதிகம் நம்பும் என் மனது அடிமைப்பட்டு விட்டதா என்ன? அடிமுட்டாள் தனமாக தான் அந்த நினைப்பை சுமந்து கொண்டு, கடினமான காலங்கள் கடந்து தான் வசந்த காலங்கள் வரும் என்றும், அதில் நீயும் இருப்பாய் என்றும், எந்தனை பெரும் சவால்களையும் சேர்ந்து கடந்து விடலாம் என்றும், எதிர்காலத்தின் கனவுகளை ஏந்தி கொண்டு நிற்கின்றது நினைவுகள் எங்கும். இறுதியாக இங்கே நான் முற்றுப்புள்ளி வைத்து முடித்து கொள்ள விரும்பவில்லை, காற்புள்ளி இட்டு காத்திருக்கிறேன் என்றாவது ஒரு நாள் அந்த அன்பு உணரப்படும் என்று, உணராமல் போனால் கூட கடந்து வர காலம் உண்டு, பிரபஞ்சம் உண்டு என்ற நம்பிக்கையுடன்.



Comments
Post a Comment