கடல்
- எல்லோரும் ஒரே கடலைத் தான் பார்த்துக் கொண்டிருந்தோம்.ஆனால் ஒவ்வொருவருக்கும் தன்னை வேறு வேறு மாதிரி காட்டிக் கொண்டிருந்தது கடல்.
எல்லா திசைகளும் அற்றுபோன பெருந்துயரின் போது கூச்சப்படாமல் தட்டப்படும் கதவைப் போல நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தது சிலருக்கு.
கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களின் கறைகள் படிந்த பாதங்களை அலட்டல் இல்லாத அன்பினால் அணைத்துத் துடைத்து எடுத்துக் கொண்டிருந்தது சிலருக்கு.
இன்னும் நிறைய செய்து கொண்டிருந்தது அந்த கடல். அனைத்தையும் விவரித்து விட முடியுமா என்ன வார்த்தைகளில்.....?
- அன்று வழக்கத்தை விட அழகாக தெரிந்தது கடல், நளினமாக, மௌனமாக பேசிக் கொண்டிருந்தது கரையிடம். ஓயாத அதன் ஓதங்களை செவி மடுத்து அன்று தான் கேட்டுக் கொண்டிருந்ததோ என்னவோ?
- ஒரு வேளை நான் காணவில்லை என்று நீங்கள் தேட துவங்கினால், முதலில் தேடும் இடமாக கடற்கரை இருக்கட்டும். எனை நான் தொலைத்த வேளைகளில், தேடிச் செல்லும் இடமும் அதுதான்.
- மூன்று ஆண்டுகளாக எழுதிய காதலின் கவிதையை அழித்துக் கொள்ள மூன்று நிமிடங்களே பிடித்த நம் உரையாடலை நிகழ்த்த தைரியம் வரவழைத்தது, அந்தக் கடற்கரையின் அந்தி மலையின் புளங்காகிதம் தானோ?
- அகவை அறுபதை கடந்து, கடற்கரை மாலையில், முகங்கள் மறைந்த இருளில் தொடரும் நடைபயணத்தில், கண் மூடிக் கொண்டு கரம் பிடித்து நீ வர, துணையாக இவன் இருக்கிறான் என்ற துணிவின் பெருமையோடு, நடை போட வேண்டும் நம் காதல் அந்த கடற்கரையில்.
- அலைபாயும் மனதின் கண்ணிர் பெருங்கடல்களுக்கும், கரைகள் உண்டு முயற்சியின் முற்றுப்புள்ளியில்.
- மெல்லலைகளைக் காட்டிகொண்டிருக்கும் இந்த கடல் தான், ஆழிப் பேரலைகளையும் தன்னுள் வைத்துள்ளது.
- தாங்க முடியாத வலிகளுடன், தவிர்க்க முடியாத வருந்தங்களுடன் செல்லும் ஒவ்வொரு முறையும், கரங்களைப் பற்றிக் கொண்டு, தோள்களை ஆதரவாக அணைத்துக் கொடுத்து, ஒரு நூறு வார்த்தைகளால் விளக்கிட முடியாத ஆறுதலை அளிக்கும் இந்த அலைகளை விட அன்பான ஒருவனை அறிமுகம் செய்வீர்களா?



Comments
Post a Comment