தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம்..

 


ஒரு பெரும் காதல் கடல் போல் வெளி தெரிந்தாலும், என்னை முழுமையாக நேசித்து விட முடியுமா? பாராட்டுகளும், முன்மொழிவுகளும் முனைந்தாலும் தயங்கி தள்ளியே நின்றுவிடுகிறேன். 

ஆறுதல்களும், ஆசுவாசப் பரிசுகளும், வார்த்தை அணைப்புகளும், பறந்து வந்தாலும் வானில் அண்ணாந்து பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

புனைவுகள் போர்த்திய வார்த்தைகளும், முப்பொழுதும் கூடும் சிந்தனைகளுமே அழகு, அன்பு செலுத்த தகுதி அதுவென நினைக்கும் மனதை, மாற்றும் திறன் என்னிடம் இல்லை. 

உடல்வாகை, பிறப்பின் பயனை, செம்மையென கொண்டிருக்கும் ஆடவரோடு ஒப்பிட்டு தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் மூளையை நையப் புடைத்து நல்வழிபடுத்திய தேவதை இங்கு எங்குண்டு? 

எதிர்பார்க்காத வெகுளித்தனமும், ஏற்றுக்கொள்ள சலிக்காத எதார்த்தமும், காயங்களால் வீழ்ந்த போதெல்லாம் கடந்து வந்த வலிகளின் வடுக்களை முத்தமிட்டு, தன்னை மட்டுமே முன்னிலை படுத்தும் அன்பின் நிலை யாருக்கு உண்டு?

கண்ணியமாக, சமமாக நடத்தும், தன் அடையாளத்தை சமரசம் செய்து கொள்ளாத நெஞ்சுரம் யாருக்கு உண்டு? 

வார்த்தைகள் தடிக்காமல் சண்டை செய்யும் பக்குவமும், சுற்றியிருக்கும் சுவர்கள் கண்டு வியக்கும் விரகம் புனைய யாருக்கு தெரியும்?

சிறு நுணுக்கங்களோடு, பெரும் காதல் கொள்ளையாக பொழியும் இதயம் எங்கிருக்கும்? 

இவ்வளவினால் தான் தள்ளியே நின்றுவிடுகிறேன். பேனா கொண்டு இவற்றை எழுதி முடித்து கிளம்பி விடுகிறேன்.

.....


 


Comments

Popular Posts