பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

 



நாவல் வாசிக்கும் போது பூனாச்சியோடு பயணிக்கும் மனம், அதன் உணர்வுகளையும், அனுபவங்களையும், வலிகளையும், சந்தோசங்களையும் மிக நுணுக்கமாக அறிகிறது. வெள்ளாட்டின் கதை என்று மட்டும் கடந்து விட முடியாத அனுபவம் வாசித்து முடித்து பின் தோன்றாமல் இல்லை. 

வழக்கமான வாழ்வியலில் இயந்திர தன்மையோடு அணுகப்படும் பெண்களின் உணர்வுகளை அழுத்தமாக மௌனமாகவும், வலிகளாகவும் பூனாச்சி, அவளின் காதல் அறியாமல் திணிக்கப்படும் காமம் மற்றும் சுயநலத்தோடு அனுகப்படும் மகப்பேறு போராட்டங்களின் வழியே அறிவிக்கிறாள். பெருமாள் முருகனின் எழுத்தில் கதை மாந்தர்களின் வாழ்வியலும், காதலும், கதைக்களத்தின் மணமும் ஒவ்வொரு வரியிலும் உணரமுடிகிறது.


நாவலின் சில வரிகள்,

அனைவரும் பூனாச்சியை அதிசயம் என்கிறார்கள்.அவளுக்கோ பூவனே அதிசயமாக இருந்தான்.புறம் கண்டே அதிசயம் என்கிறார்கள்.அகம் கண்டு அதிசயம் சொல்வது அத்தனை சுலபமா? அதிசயம் கண்ட அதிசயம் பூவன்.அப்படி நினைத்துக் கொள்வது பூனாச்சிக்கு மிகவும் உவப்பாக இருந்தது.

சந்தோசமாக நினைத்திருக்க எத்தனையோ கணங்கள் இருக்கின்றன ஆனால் மனம் ஏன் துயர நொடிகளையே பூதாகரமாக்கிப் புலம்பித் தவிக்கிறது?

யார் யாருடன் இருக்க வேண்டும் என்பதை எல்லாம்! யார் யாரோ தீர்மானிக்கிறார்கள்?

எத்தனை அழைப்புக் குரல்களையும் புறம் தள்ளி மேலெழுந்து நிற்பது வயிற்றின் குரல். அதற்குச் செவி மடுத்த பிறகே பிறவற்றைப் பற்றி உணர்வு வரும்.

சீமானாக இருந்தாலும் செல்வம் வைத்திருந்தாலும் சோற்றைத்தானே தின்றாக வேண்டும்?

இன்னைக்குப் பாரு பேச்சு ருசியில் அப்படியே தூங்கி போயிட்டேன். கஞ்சாப் போத சாராயப் போதைன்னு சொல்றாங்களே, அதெல்லாம் போத கெடையாது இந்தப் பேச்சுத்தான போத பேச்சுப்போத மீறுச்சுன்னா எல்லாத்தயும் மறந்திருவம்' என்று ஆதங்கப்பட்டா,கிழவி. 

அதிசயம் எப்போதாவது நடப்பது,அடிக்கடி நடந்தால் சாதாரணம்.

இந்த மனசு இருக்குதே அதுக்கு எத்தன குடுத்தாலும் போதாது.

தூர இருக்கவங்களுக்கு அதிசயம்,பக்கத்துல இருக்கறவங்களுக்கு தொந்தரவு.

வாயிருப்பது மூடிக்கொள்ளத்தான், கையிருப்பது கும்பிடுப் போடத்தான்,காலிருப்பது மண்டியிடத்தான், முதுகிருப்பது குனியத்தான்,உடலிருப்பது ஒடுங்கத்தான்,ராசாங்கதத்திடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லோரும் நன்றாகவே கற்றிருந்தார்கள்.

Comments

Popular Posts