மோகத்திரை - A time travel
நிறைய பாடல்களை மெய் மறந்து கேட்போம். ஒரு சில பாடல்களை கேட்கும் போது மட்டும் மனம் அந்த பாடலை முதலில் கேட்ட போது ஏற்பட்ட நினைவின் அடுக்குகளுக்குள் அழைத்துச் செல்லும். சரியாக சொல்ல வேண்டும் என்றால், அந்த பாடலை முதலில் கேட்டு மகிழ்ந்து கொண்டாடி ரசித்த அந்த நேரத்திற்கு அழைத்துச் செல்லும், அதற்கு முன்பு எப்போது கேட்டோம் என்று அது இன்னும் காலத்தின் படிகளில் பின்னோக்கி பயணிக்கும்.
எனக்கு அப்படி அழைத்துச் செல்லும் பாடலாக முதலில் வருவது, பீட்சா திரைப்படத்தின் மோகத்திரை.
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்கிற அனுபவமாய் தோன்றும். சந்தோஷ் நாராயணன் இசையில் பிரதீப் குமார் குரலில் கபிலனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதைகளாய் கட்டிப்போடும் இசைக்கோர்வை அது. என்னைத் தொலைத்து அவசரமாய் வேகமாய் இயங்கி கொண்டிருக்கும் வாழ்வின் முறையில் அவசியம் தேவைப்படும் சிறிய ஒரு இளைப்பாறுதல் உணர்வை ஏற்படுத்தும் பாடல் இது எப்போது கேட்கின்ற போதும். தூக்கம் திருடு போன நள்ளிரவில் ஆறுதல் வேண்டி நேரம் மறந்து மனம் கேட்கும் இசை அது.
பாடலின் இசை அமைப்பு பற்றி விளக்கும் அளவிற்கு விவரங்கள் அதிகம் எனக்கு தெரியாது. பாடலின் Guitar இசையும் Voilin இசையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வருடுவதில் துவங்கும் பாடலை, பிரதீப் குமார் தன் குரலின் வழியே அணைத்துச் சென்று ஆறுதல் சொல்லும் பாடலின் வரிகளை வெறும் காதல் கவிதைகள் என கடந்திட முடியாத உணர்வு. வழக்கம் போல சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பு பாடல் துவங்கிய இடத்தின் உணர்வு எது? முடியும் இடத்தின் உணர்வு எது? நடுவே எங்கே சென்று வந்தோம் என்று ஊகிக்க முடியாத உணர்வின் நிலையில் வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை முதலில் இருந்து கேட்கிறாயா என்று மனதினை கேட்க வைத்து விடும்.
மீண்டும் மீண்டும் எனைக் கேட்க வைக்கும் எனக்கு பிடித்த பாடலின் வரிகள்,
தீண்டும் தினம், தென்றல் மனம். கூந்தல் இழை, வெந்நீர் மழை. உன் காதலால் என்னுள் நூறு கனா!
உணர்த்தும் வழி அறியாமல் தவித்து கிடந்த மனதின் உணர்வுகளை இவ்வளவு அழகாக ஆழமாக பதிவு செய்து விட்டதாக மனம் கொண்டாடும் வரிகள் அவை.
மேகம் இவன்... தூறல் இவள். இரவு இவன்... நாற்றம் இவள். காற்று இவன்... வாசம் இவள். வாழ்த்து இவன்... அர்த்தம் இவள்...
என முடியும் பாடலின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதைகள்.
மோகத்திரை - ஒரு பின்னோக்கிய காலப்பயணம். அதனால் தான் என்னவோ? இன்று இந்த இரவிலும் (2 am Feb 2 2024) என்னை கல்லூரிக்கு(2018) அழைத்துச் சென்று விட்டது.
https://open.spotify.com/track/4z5aoK0yI5kgbikXoWLWfB?si=dqTmA7lpRjWqxzff534iGw
https://open.spotify.com/track/1TnQw93AzRekiOJuCAv4V4?si=vzla0sYbTYqVlo8bhgVYAw



Comments
Post a Comment