முதல் முறை பார்த்த ஞாபகம் - A timeless classic
பொதுவாக நாம் கேட்கும் பெரும்பாலான பாடல்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒரு உணர்வுடன் இணைக்கப்பட்டிருக்கும். அது கோபம் மகிழ்ச்சி ஏமாற்றம் என ஏதோ ஒன்றாக இருக்கும். ஏமாற்றத்தின் வலிகளின் நடுவே சந்தோசமான நினைவுகளை அசைபோடும் நம் மனதின் இயல்பைப் போல, ஒரே பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்வுகளை இணைத்து சொல்லி விட முடியுமா என்ன? பாடலின் ஒரு சரணம் மகிழ்ச்சியாகவும் மற்றொன்று சோகமாகவும் இல்லாமல், முழு பாடலுமே உணர்ச்சிகளின் கலவையாக அமைத்திட முடியுமா என்ன?
ராஜா இதை பல சமயங்களில் செய்திருக்கிறார், ‘நீ தானே என் பொன் வசந்தம்’, திரைப்படத்தின் ‘முதல் முறை பார்த்த அனுபவம்’ பாடலைத் தவிர வேறு ஒன்றை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லிவிட முடியுமா என தெரியவில்லை.
இது குறித்து இணையத்தில் தேடிய மற்றும் அவருடைய நேர்காணலில் கிடைத்த தகவல்களை கொண்டு, என் மனம் விரும்பிய பாடலாக எப்படி இந்த பாடல் அமைந்தது என அறிந்து கொண்டதின் விளைவு இந்த பதிவு.
முதலில் பாடலின் கதை அமைப்பை பற்றி சொல்வதென்றால், வழக்கமான கதாநாயகி பாடலை பாடுவதைப் போல வைக்காமல், அதற்கான உதட்டு அசைவுகளை கூட முயற்சி செய்யாமல், பின்னணியில் உள்ள நிகழ்வுகளின் நாடங்கங்கள் வழியே நாயகியின் ஆன்மாவை கேட்க வைக்கிறது. இதனால் அவளோடு நம்மையும் ஒப்பிட்டு உணர முடிகிறது. இந்த பாடல் சுய வெறுப்பு, ஏக்கம் மற்றும் கோபத்தின் கலவையாகும்.
நாயகி தன் காதலனை இழந்துவிடுவது போன்ற உணர்வைப் பெறுகிறாள், அது அவளுடைய இதயத்தை ஒரு கொந்தளிப்பில் தள்ளுகிறது. அதனால் வரவிருக்கும் இழப்புக்கு அவள் தன்னைக் குற்றம் சாட்டுகிறாள், அந்த நேரத்தில் அவள் அவனுடன் இருந்த அற்புதமான நேரத்தை நினைவுபடுத்துகிறாள்.
நேசிப்பவருடன் பிரியப்போகும் இதயத்தின் இந்த சிக்கலான தன்மையை வெளிப்படுத்த வேண்டும். விவரிக்க முடியாத முடியாத இந்த இதயத்தின் உணர்வுகளைக் கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறார் ராஜா.
இந்த பாடலுக்காக அவர் லண்டன் சென்று ஆங்கிலோ-இந்தியன் இசைக்குழுவை வைத்து செய்த தொழில் நுட்பங்கள் உலகத் தரம். மகிழ்ச்சியா, சுய வெறுப்பா, ஏக்கமா என உணர செய்யும் Creative Strings and jazz drummings,an aggressive bass and a filmi chorus, சோகத்தை நினைவுபடுத்த திடீரென்று ஒரு ஒற்றை வயலின் பாடலின் நடுவே. ஒலிகளின் கோர்ப்பு உணர்ச்சிகளை அவ்வளவு தீவிரத்துடன் வெளிப்படுத்துகின்றன. சரணம் துவங்கும் போது வரும் strings play சரணத்துடன் சேரும் போது ஒரு அசாதாரண ஆழம் பாடலினுள் சேர்கிறது.
வலி மிகுந்த அனுபவங்களை வார்த்தைகளாக விவரிக்க முடியாத போது, கவிதைகளாய் கொண்டு வந்து சேர்ப்பதில் நா முத்துக்குமார் தவிர்க்க முடியாத கவிஞர். இப்பாடலின் வரிகள் அனைத்தும் கவிதைகள் தான்.
எளிமையான வார்த்தைகளுக்குள் ஆழமான அர்த்தங்களை வைத்து தைக்கும் முத்துக்குமாரின் வரிகள் உணர்வுகளின் வலிகளோடு உரையாட தவறுவதில்லை. பாடலின் முன் பின் வரிகளில், சூழலின் சிக்கலான உணர்வுகளை சமரசம் செய்யாமல் அழுத்தமாக எழுதியுள்ளார். உதாரணமாக,
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
நெஞ்சமேனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசத்திலே
உன் பார்வையின் முகவரிகள்.
சுய வெறுப்பு, ஏக்கம், சோகம் ஊடே இழை ஓடும் ஒரு நினைவின் மகிழ்வு, அனைத்தும் கடந்து சேரும் இடம் நீ என காதலின் பிரிதல் நிமித்தம் தாங்காத மனதின் இருத்தல் நிமித்த ஏக்கம் என அழகாக ஆழமாக பதிவு செய்திருக்கிறார் முத்துக்குமார். இது போன்ற வரிகளின் வழியே உரையாடுகிறார்,
முதல் முறை கேட்ட ஞாபகம்,
உயிரினில் தந்து போகிறாய் என்று..
வெயிலா மழையா வலியா சுகமா எது நீ...
எதுவாயினும்.
நீதானே என் பொன்வசந்தம்
A timeless classic song..!
https://open.spotify.com/track/3re0HrBkLNV2lfHoTtSOgy?si=h10f3lnPS46O0OIQJhvbPA



Comments
Post a Comment