நவீன சமுகத்தின் வேட்டையாடி விலங்காகிய நான்


சமுக வலைதளத்தில்
பெண் பெயரில் உள்ள 
ஆண்களையும் விட்டு வைக்காத,
எனது அடையாளத்தை  அடிக்கடி
அதில் அடைய துடிக்கும் நான்.

அறிமுகம் ஆன ஐந்தே நிமிடங்களில் 
ஆடைகள் அவிழ்க்க சொல்வதில்
வெட்கத்தை விற்று விட்டு,
அந்தரங்கம் தொடங்கி 
உள்ளாடையின் எல்லை வரை
கண்கள் மேய,
நினைவெல்லாம் காமம் தோய,
தொலைபேசியின் வழியே 
கற்பழிக்கும் கலையை பயின்ற நான்,

பள்ளி குழந்தையோ,
பிறந்த குழந்தையோ,
பருவ பெண்ணோ,
உருவம் திரண்ட 
முதியவளோ,
வயதின் மூப்போ,
இளமையின் சேர்ப்போ,
அவள் பிறப்புறுப்பு
பெற்றிந்தால் போதும்,
எனது அடையாளம் 
அடைய துடிக்கும் 
உணர்ச்சி பிரியன் நான்.

ஆடைகள் விலகும்
இடங்களை வெறித்து
தேடும் கண்களோடு 
ஆடைகளின் சுதந்திரத்தை
அந்தரங்க உறவின்
அழைப்பென அலையும்
மனப் பிறழ்சியுடைய நான், 

அவளுக்கும் உணர்ச்சியுண்டு 
என்னை விட வென்று
அரைகுறை வசனங்களின் 
உதவியோடும்
ஆபாசங்களை அவிழ்த்துவிடும்
சினிமாவின் துணிவோடும்,
அசிங்கமென அறிந்தும்
அவளிடம்
அதை அழகாக ரசிக்க
பேசுவதில் அலாதியான 
இன்பம் காணும் நான். 

அவசரமான பேருந்து
நெரிசலோ,
அழகான பூங்காவோ,
அவளின் மானத்தை,
பெருந்தன்மையை, 
கும்பலை பயன்படுத்தி
வக்கிரம் செய்வதில்
சுகம் தேடும் நான்.

மீசை அரும்பும் முன்
ஆசை அதிகம் வளர்த்து
அடையாளத் திமிரோடு
ஆசையாய் அன்பாய்
பழகும் அவள்களிடம்,
ஆண் பெண் உறவின் 
முதரிச்சி படுக்கையறை
உறவென்றும்,
நட்பிலும் இது சரியென்றும்,
என் காமத்தின் தேவைக்கு
செய்யும் களவாடால்களை
நியாமென போற்றி நடிக்கும்
நவீன விலங்காகிய நான்,

அகவை பாதி வாழ்க்கை
கடந்த போதும்,
பாசம் காட்ட வேண்டிய
வயதில் உள்ள அவள்களிடம்,
அக்கறையாய் பேசி,
உறவினர் என்ற போர்வைக்குள்
ஒளிந்து கொண்டு,
இச்சையை தீர்த்து கொள்ளும்
அவலத்திற்கு சிறிதும்
சபலம் கொள்ளாத 
பசு தோல் போர்த்திய 
புலியாகிய நான். 

ஒரு ஆண் என சொல்லி கொள்வதில்
பெரிதாக பெருமைப்படுகிறேன்?

  


Comments

Post a Comment

Popular Posts