அன்பிற்கு உண்டோ வரையறைகள் - அவள் அறியா இவன்
அத்தியாயம் 1:அறிமுகம் இல்லாத அந்தாதி அவள்
அத்தியாயம் 2: அவள் அறியா இவன்.
எதற்காக அவளை சந்தித்தோம்? சந்திக்காமல் இருக்க வைத்திருந்த காலம், இன்று அவளை அறிமுகம் செய்து வைத்து நிகழ்த்த காத்திருக்கும் மாயம் தான் என்ன?
இவனுள் மாயிந்து போன உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து எழுப்பும் அவளின் அறிமுகமும், ஆறுதல் வார்த்தைகளும் புதிதாக பிறந்த அனுபவத்தை இவனுக்கு அளித்ததை அவள் அறிவாளா? உயிர் பெற்ற உணர்வுகள் இவனுள் நடத்தும் போராட்டங்கள் குறித்து அவள் அறிந்திருப்பாளா? அறிந்திருந்தால் அவள் ஏன் உயிர் பெற்ற அவ்வுணர்வுகளுடன் விளையாட போகின்றாள்? உயிர் பெற்ற உனர்வுகள் அவளை தேட இவனிடம் காரணம் கேட்கையில், அவளோ உணர்வுக்கான காரணம் ஏன் என்று கேட்கிறாள் இவனிடம்? பதில்கள் அவள் தான் என்பதை அவள் அறிவாளா?
அவளைத் தேட காரணம், அவளை தவிர வேறொன்றும் இல்லை என்பதை அறிந்தும், என்னிடம் அப்படி என்ன என்ற அவளின் கேள்விக்கு, அவளை போல் இது வரை யாரும் இவனிடம் பழகவில்லை என்று சொல்வதும், இதுவரை இவனுள் கிடந்த தனிமையின் தீவுக்குள் அவளின் காலடி தடம் தந்த மாற்றங்களை சொல்வதும் மிகையாக தான் இருக்கும் என்று தோன்றுகின்றது. எவர் ஒருவரும், புதிதாய் ஒருவரை புரிந்து கொள்வதற்கான சூழலும், நேரமும் கிடைக்க பெற்றால் முதல் கட்ட அறிமுகம் அமைவதில் ஆச்சரியம் அதிகமில்லை என்பது இவனின் புரிதல். ஆனால் இரண்டாம் கட்டத்திற்கான காரணங்கள் என, மனம் தேர்வு செய்யும் வினாக்களுக்கு பொருத்தமான பதில் அளிக்கும் ஒருவரை, மேலும் புரிந்து கொள்ள தேடும் மனநிலை தான் இவனின் இப்போதைய நிலையும். இவனை அறிந்து கொள்ள அவளுக்கும், அவளை அறிந்து கொள்ள இவனுக்கும் தோன்றிய காரணங்களும் ஒத்து போகும் புள்ளிகள் சரியான பதிலாக இருக்கும் என்றே தோன்றுகின்றது அவளின் கேள்விக்கு. அதில் இன்பம் மட்டுமின்றி, கோவம், வெறுப்பு, பயம், கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என இன்னும் நிறைய சந்தித்து தெளியவும் காத்திருக்கும் இவனின் மனம் அறிவாளா?
இவனின் துணையாக வரும் அவளுக்கு, அவளை மட்டும் அவளது வாழ்க்கையில் இருந்து பெற்றுக் கொள்ள விரும்பாத, அவளின் வாழ்க்கையில் இவனும் ஓர் அங்கமாக, இவனின் வாழ்க்கையில் அவளும் ஓர் அங்கமாக, அவளின் கனவுகளுக்கும் குறைந்த பட்ச ஆசைகளுக்கும் செவி மடுக்கும், வாழ்வின் பயணம் எங்கும் ஓர் சக வழித்துணையாக, அவளின் உறவும், நட்பும் இவனுக்கும் தான் என்று, இவனுக்கு இவன் எதுவோ, அதுவே தான் அவளும் இவனுக்கு என இவன் கொண்ட உணர்வை அவள் அறிவாளா?
உயிரோடு கலந்த இந்த உணர்வை வளர்த்தெடுக்க அவள் அழகாக இருக்க வேண்டும் என்று இவன் நினைக்கவில்லை என்பதை அவள் அறிவாளா? அவள் கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களுக்கும் சேர்த்து இவன் ஆறுதல் அளிக்க காத்திருப்பதை அவள் அறிவாளா? இல்லை, அவள் கடந்து வந்த பாதையில் அவன்களுடன் ஆன போராட்டங்களில் சோர்ந்து போன அவள், இவனும் அவன்களில் ஒருவன் தான் என்ற முடிவுக்கு வந்திருப்பாளோ, இல்லை இவனும் அவனாக மாறும் முன், இவனை நிராகரிக்க துணிந்து விட்டாளோ என்னவோ? ஆனால் பல அவன்களின் கனாக்களில் உலா வரும், அவளின் கனாக்களில் இவன் வருவது இவனுக்கு பெருமை தான் என்பதை அவள் அறிவாளா? இவனின் அன்பு அதிகாரமும், சுயநலமும், ஆண் என்ற அடையாளமும் இன்றி, மரியாதையாலும், நம்பிக்கையாலும், வெளிப்படை தன்மையாலும் நிறைந்தது என்பதை அவள் அறிவாளா?
இன்னும் பல கேள்விகளுடன் இவன், தெளிந்த சிந்தனையுடன் வருவான் பேரன்புடன் அவளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும்..



Comments
Post a Comment